Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

621 எஸ்.ஐ.,க்கள், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளின் காலிப்பணியிட இறுதி பட்டியலை 30 நாட்களில் வெளியிட வேண்டும்: தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 621 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கும், 129 தீயணைப்புத் துறை நிலைய அதிகாரிகள் பணியிடங்களுக்கும் விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2023ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முக தேர்வு போன்ற தேர்வு நடைமுறைகள் முடிந்து 2024 ஜனவரி மாதம் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இதில், இடஒதுக்கீட்டு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தவறுகளை திருத்தி, திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்ததை பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், 2024 அக்டோபர் 3ம் தேதி திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியலை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அப்போது, முதல் பட்டியலில் இடம்பெற்றிருந்த பல விண்ணப்பதாரர்களின் பெயர்கள், இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. இடஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, புதிய தேர்வுப் பட்டியலை தயாரிக்க ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் நியமிக்கப்படுகிறார். புதிய தேர்வு பட்டியலை 3 மாதங்களுக்குள் தயாரித்து, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தலைவர் வசம் நீதிபதி பால்வசந்தகுமார் ஒப்படைக்க வேண்டும். அதனை தேர்வு வாரிய தலைவர் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில், திருத்தியமைக்கப்பட்ட தேர்வு பட்டியலுடன் கூடிய அறிக்கையை ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார் சமர்ப்பித்தார். ஆனால், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை. அந்த பட்டியலை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணயம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி, இட ஒதுக்கீடு நடைமுறை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை சட்டம் ஆகியவற்றை பின்பற்றி தேர்வு பட்டியல் தயாரித்துள்ளார். அதில் எந்த விதிமீறலும் இல்லை. தனி நீதிபதி உத்தரவை ஏற்றுக் கொண்ட நிலையில், தாமதமாக இந்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் அளித்த அறிக்கையின் அடிப்படையில், 30 நாட்களில் இறுதி தேர்வு பட்டியலை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டனர்.