61% பேருக்கு உடல் பருமன் பிரச்னை: கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்வு; 30% பேருக்கு டைப் 2 நீரிழிவு நோய்; உடல் நிறை குறியீடு பராமரிக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்
சென்னை: உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி, உலகளவில் 1.9 பில்லியன் பெரியவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில், குறிப்பாக நகர்ப்புறங்களில், உடல் பருமன் விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. அப்போலோ ஹெல்த் ஆப் தி நேஷன் 2025 அறிக்கையின் தரவு (லட்சக்கணக்கான அப்போலோ சுகாதார சோதனை முடிவுகளிலிருந்து பெறப்பட்டது) பிரச்னையின் தீவிரத்தை வெளியிட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட பெரியவர்களில் 61 சதவீத பேர் உடல் பருமன் பிரச்னையுடன் உள்ளனர். அதே நேரத்தில் 18 சதவீத பேர் அதிக எடை கொண்டவர்களாக இருக்கிறார்கள். உடல் பருமன் பிரச்னையானது நம்முடைய குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. தொடக்கப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளில் 8 சதவீத பேர் மற்றும் கல்லூரி மாணவர்களில் 28 சதவீத பேர் உடல் பருமன் பிரச்னையுடன் இருக்கின்றனர்.
இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனை மருத்துவர் ராஜ் பழனியப்பன் கூறியதாவது: ஒரு காலத்தில் உடல் பருமனுக்கு சிகிச்சை பெறுபவர்களில் நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முதியவர்கள் பெரும்பான்மையானவர்களாக இருந்த நிலையில், இன்று சிகிச்சைப் பெற வரும் நோயாளிகளில் சுமார் 35 சதவீத பேர் மட்டுமே அந்த வகையில் வருகிறார்கள். 30-45 வயதுடையவர்களில் உடல் பருமன் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, மேலும் 20 வயதுடையவர்களில், இது ஒற்றை இலக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 25-30 சதவீத ஆக அதிகரித்து இருப்பது கவலையளிக்கும் பிரச்னையாக இருக்கிறது.
முந்தைய ஆண்டுகளில் 50+ வயதுடையவர்களுடன் ஒப்பிடும்போது, ப்ரீடயாபயாட்டீஸ் பிரச்னை இப்போது 20-30 வயதுடையவர்களில் 30 சதவீத பேரை பாதிக்கிறது. மேலும் டைப் 2 நீரிழிவு நோய் பெரும்பாலும் 30-35 வயதிற்குள் தொடங்குவது தெரிய வந்திருக்கிறது. உயர் ரத்த அழுத்தம், டிஸ்லிபிடெமியா மற்றும் பிற வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் இப்போது உடல் பருமன் உள்ள பெரியவர்களிடையே இருப்பது ஒரு பொதுவான பிரச்னையாகி இருக்கிறது. உடல் பருமன் பிரச்னையை உடனடியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், அது நம் ஆயுட்காலத்தை கணிசமாகக் குறைத்து விடும். வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும்.
மேலும், இதய நோய், பக்கவாதம், டைப் 2 நீரிழிவு, தூக்கத்தில் மூச்சுத்திணறல், கீல்வாதம், சில புற்றுநோய்கள் (மார்பகம், பெருங்குடல் மற்றும் எண்டோமெட்ரியல் உள்பட) மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் போன்ற கல்லீரல் கோளாறுகளுக்கான அபாயத்தை அதிகரிக்க செய்யும் வாய்ப்புகள் அதிகம். அதேபோல், மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் கோளாறுகளுக்கும், கருவுறுதல் பிரச்னைகள், கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மனச்சோர்வு மற்றும் பதற்றம் உள்ளிட்ட மனநலப் பிரச்னைகளுக்கான வாய்ப்பையும் அதிகரிக்க செய்யலாம்.
இந்த நிலைமைகள் பல ஆண்டுகளாக எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் அமைதியாக உருவாகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மரபியல் காரணங்கள் (குடும்ப வரலாறு) 30-70 சதவீத உடல் பருமனுக்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது, மேலும் ஹார்மோன் சம்பந்தப்பட்ட காரணிகள் 40-50 சதவிதம் அளவில் உடல் பருமன் ஏற்பட காரணமாக இருக்கின்றன. உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி இல்லாமையினால் 30-35 சதவீதம் உடல் பருமன் பிரச்னை உருவாகிறது. நம்முடைய அன்றாட உடல் இயக்க செயல்பாடுகளை நீண்ட தூர பயணங்கள், தொடர்ந்து அமர்ந்தபடியே பார்க்கும் வேலைகள், சவுகரியத்தை நாடும் சூழல் ஆகியவை மாற்றி அமைத்திருக்கின்றன.
அதே நேரத்தில், பெரும்பாலும் சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகம் இருக்கும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இப்போது பரவலாகக் கிடைக்கின்றன. இவற்றுடன் போதுமான அளவு தூக்கம் இல்லாமை, மன அழுத்தம், சில மருந்துகள், மனநல சவால்கள் மற்றும் குடல் நுண்ணுயிரியிலுள்ள மாற்றங்கள் போன்ற தாக்கங்களும் மற்றொரு பக்கம் நமக்கு காத்திருக்கின்றன. இவை அனைத்தும் வளர்சிதை மாற்றத்தை சீர்குலைத்து நம்முடைய உடல் எடை அதிகரிப்பதை ஊக்குவிக்கின்றன.
பேரியாட்ரிக்ஸ் பெரும்பாலும் அறுவை சிகிச்சைக்கு சமமான ஒன்றாக கருதப்படுகிறது. உண்மையில் இது, உடல் பருமனுக்கான சிகிச்சையாகவும், உடல் பருமனை பராமரிக்கவும் உதவுகிறது. பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (வயிறு மற்றும் குடலை அறுவை சிகிச்சை மூலம் மாற்றியமைப்பது), செய்ய தகுதியுள்ளவர்களுக்கு மட்டும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினாலும், இது மிகக் குறைந்த சதவீதத்தினருக்கு மட்டுமே பொருத்தமானது. உடல் பருமனை கையாளும் நிலையில் இருந்து, நாம் அதை குணப்படுத்துவதை விட, முன்கூட்டியே வராமல் தடுக்கும் வாழ்க்கை சூழலுக்கு மாற வேண்டும். இந்த மாற்றம் நம்முடைய வீடு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடல் நிறை குறியீடு வகைகள்
உடல் நிலை அளவு
சாதாரண எடை 18.5-22.4
அதிக எடை 22.5-27.4
உடல் பருமன்
(வகுப்பு I) 27.5-32.4
உடல் பருமன்
(வகுப்பு II) 32.5-37.4
தீவிரமான
உடல் பருமன் (வகுப்பு II) 37.5 மேல்
* உடல் பருமனை கட்டுப்படுத்துவது எப்படி?
உடல் பருமனை கட்டுப்படுத்துவதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்கவும். வாரத்தில் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி (நடைபயிற்சி, ஓட்டம், யோகா) அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு 7-8 மணி நேர தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். தியானம், யோகா மற்றும் மனநல ஆலோசனைகள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். மாணவ, மாணவிகள் படிப்பு முடித்து பெறும் க்ரேடிங்கில், படிப்புக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை, சரி சமமான மதிப்பீட்டை அவர்களது உடல் இயக்க செயல்பாடுகளுக்கும் வழங்க வேண்டும். இது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் உதவும்.