* 5 கிலோ கஞ்சா பறிமுதல்
* ஒருவர் தப்பி ஓட்டம்
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பேருந்து நிலையம் அருகே ரோசணை காவல் ஆய்வாளர் தரனேஸ்வரி தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக வந்த பைக்குகளை நிறுத்திபோது போலீசார் மீது இடிப்பது போல் சென்று அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வெளிமேடுபேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.
அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் மற்றவர்களை விசாரணை செய்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். பைக்குகளில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் 6 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அவர்கள் வந்தவாசி தாலுகா சு.காட்டேரி பகுதியைச் சேர்ந்த கவியரசு(23), அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (23), விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்த ரகுபதி (19), வெள்ளிமேடுபேட்டை பகுதியை சேர்ந்த குபேந்திரன்(19), திண்டிவனம் கீழ்மலையனூர் பகுதியை சேர்ந்த டிராவிட் (19) தாதாபுரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(20) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 கிலோ கஞ்சா இரண்டு பைக்குகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மேலும் விசாரணையில் அவர்கள் திருப்பதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திண்டிவனம், வந்தவாசி பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. தப்பியோடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.