Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

5 அம்ச திட்டம்

இந்தியா-சீனா இடையே நீண்ட காலமாக உள்ள எல்லைப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. சீனா அடிக்கடி இந்திய எல்லையில் உள்ள கிராமங்களை ஆக்கிரமித்து புதிய பெயர்களை சூட்டுவது, சாலை அமைப்பது, அடிப்படை வசதிகள் செய்வது என்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சீனா வரைபடத்தில் நமது பகுதிகளை இணைத்து வௌியிட்டு வருகிறது. இதற்கெல்லாம் தீர்வு காணும் வகையில் இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியா-சீனா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. இதற்கு தற்போதைய பேச்சுவார்த்தை மாற்றாக அமையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. மேலும் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.

இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடியையும் சீன அமைச்சர் வாங் யீ சந்தித்து பேசினார். கடந்த அக்டோபர் 2024ல் நடந்த கசான் உச்சி மாநாட்டில் எட்டப்பட்ட தலைவர்களின் கருத்தொற்றுமையின் அடிப்படையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் அமைதி நிலவுவதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சிக்கலான எல்லைப் பிரச்னையைக் கையாளவும், ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும் ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன்படி, 2005ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண வேண்டும். எல்லை வரையறையில் எளிதில் தீர்வு காணக்கூடிய பகுதிகளைக் கண்டறிய நிபுணர் குழு அமைக்கப்படும். எல்லையில் நீடித்த அமைதியை உறுதிசெய்ய பிரத்யேக செயற்குழு உருவாக்கப்படும். மேற்குப் பகுதிக்கு மட்டுமிருந்த பொதுநிலை அமைப்பு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கும் விரிவு

படுத்தப்படும். இறுதியாக, பதற்றத்தைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது.

கடந்த கால பின்னடைவுகளைக் கடந்து, கட்டமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த முக்கிய நகர்வானது, ஆசியாவின் இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான உறவில் புதிய கட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை 2026ம் ஆண்டு சீனாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி பயங்கரவாத சதிகளை அரங்கேற்றி வரும் பாகிஸ்தானை பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுத்து இந்தியா அடக்கிவைத்துள்ளது. இந்நிலையில் சீனாவுடனான சுமுக உறவை பேண எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க கூடியதாகும்.