Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனித கழிவுகளை அகற்ற நீலகிரிக்கு 5 ரோபோடிக் இயந்திரம்: தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் தகவல்

ஊட்டி: ஊட்டியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை வகித்து 10 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை உட்பட பல்வேறு உதவிதொகைக்கான காசோலை மற்றும் அனுமதி ஆணைகளை வழங்கி பேசியதாவது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வார்டுகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ளும், தூய்மை பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் சமர்பிக்க வேண்டும்.

ஆட்கள் பற்றாக்குறை இருந்தால் கலெக்டர் மூலம் என்னிடம் தெரிவிக்கும் பட்சத்தில், அதனை உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் தூய்மைப்பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களான முககவசம், கையுறை, காலணி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வழங்க வேண்டும். இதனை அந்தத்துறை அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதனை உடனடியாக அந்த துறை அலுவலர்கள் அல்லது கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் ரோபோடிக் இயந்திரம் மூலம் மனித கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்ட கலெக்டர் கடிதம் அனுப்பும் பட்சத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 5 ரோபோடிக் இயந்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்களின் நலன் கருதி மாதம் ஒருமுறை குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில் தூய்மை பணியாளர்களும் கட்டாயமாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். அதேபோல், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகள் வழங்க வேண்டும். பணிக்காலத்தில் இறந்த நபர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகையை முதல்வர் ரூ.8 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி அறிவித்துள்ளார். அதேபோல், ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்கள் எல்லாம் நீங்கள் தெரிந்து, அதனை பெற்று பயன்பெற வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், உதவி இயக்குநர்கள் சிவசங்கர், கணேசன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், நகர்நல அலுவலர் சிபி, நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், தாட்கோ பொது மேலாளர் செல்வி ஆர்னிபேர்ள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.