Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பத்திரிகையாளர்கள் கூடாரம் மீது தாக்குதல்; காசாவில் 5 பத்திரிகையாளர்கள் பலி: இஸ்ரேல் ராணுவம் பரபரப்பு குற்றச்சாட்டு

காசா: காசா நகரில் பத்திரிகையாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் அனஸ் அல்-ஷெரீப் உட்பட ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில், 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல சமயங்களில், பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களை ஹமாஸ் அமைப்பினர் என்று முத்திரை குத்தி, அவர்களது செய்திகளின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்நிலையில், நேற்று இரவு காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே, பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தியது. இதில், அல் ஜசீரா செய்தியாளர் அனஸ் அல்-ஷெரீப் (28) மற்றும் அவரது பத்திரிகையாளர்களான முகமது குரேகா, இப்ராஹிம் ஜாஹர், முகமது நவுபல், மோமன் அலிவா ஆகிய ஐந்து பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். கொல்லப்படுவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு கூட, அனஸ் அல்-ஷெரீப், காசா நகரின் மீது இஸ்ரேல் தீவிர குண்டுமழை பொழிந்து வருவதாகப் பதிவு செய்திருந்தார்.

இந்த படுகொலையை வன்மையாகக் கண்டித்துள்ள அல் ஜசீரா ஊடக நிறுவனம், ‘இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான, திட்டமிட்ட தாக்குதல். உண்மையை வெளிப்படுத்தும் குரல்களை நசுக்கும் முயற்சியாகும்’ என்று குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இஸ்ரேல் ராணுவம், அனஸ் அல்-ஷெரீப் ஹமாஸ் அமைப்பின் ஒரு பிரிவிற்குத் தலைமை தாங்கியதாகவும், அதற்கான மறுக்க முடியாத ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.