Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

550 இண்டிகோ விமானங்கள் ரத்து: இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு

மும்பை: இண்டிகோ நிறுவனத்தின் 550க்கு மேல் விமான சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி,மும்பை, பெங்களூரு,சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் கம்ப்யூட்டர்கள் செயலிழப்பினால் நேற்று முன்தினம் இண்டிகோவின் 200 விமானங்கள் ரத்து ஆனது. மேலும் 700 விமானங்கள் தாமதம் ஆனது. இந்த நிலையில்,இரண்டாவது நாளான நேற்று இண்டிகோவின் 550க்கும் மேல் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர். டெல்லியில் மட்டும் 95 விமானங்கள், மும்பையில் 85 , ஐதராபாத்தில் 70 பெங்களூருவில் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஏராளமான விமானங்கள் தாமதம் ஆகின. ரத்து ஆனதில் பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களாகும். நாட்டின் மிக பெரிய விமான நிறுவனமான இண்டிகோவில் கடந்த சில நாட்களாகவே இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து வட்டாரங்கள் கூறுகையில், சோர்வை கையாள்வதற்கும், விமானிகளுக்கான ஓய்வு நேரத்தை அதிகரிப்பதற்கும் ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் புதிய அரசாங்க விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன இதன் பிறகு விமானிகள், கேபின் பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த நிறுவனம் திணறி வருகிறது. இதனால் விமானங்கள் ரத்து சய்யப்படுவது மட்டுமில்லாமல் ஏராளமான விமானங்கள் 12 மணி நேரம் தாமதம் ஆகியுள்ளன.

இண்டிகோ சார்பில் தினசரி 2300 விமான சேவைகள் அளிக்கப்படுகிறது. இந்த பிரச்னையால் அதன் குறித்த நேர செயல்பாடுகள் 19.7 சதவீதமாக குறைந்துள்ளது.

டிஜிசிஏ உத்தரவு: இது குறித்து சிவில் விமான போக்குவரத்து ஆணையம்(டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், இண்டிகோ விமான சேவைகளின் பாதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 1232 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலைமைக்கான காரணங்கள் மற்றும் விமானங்கள் ரத்து, தாமதம் ஆகியவற்றை குறைப்பதற்கான திட்டம் குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

* இண்டிகோ விளக்கம்

இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த சில நாட்களாக இண்டிகோ நிறுவனம் செயல்பாட்டு இடையூறுகளை சந்தித்து வருகிறது. விமான நிறுவனத்தின் உடனடி இலக்கு செயல்பாடுகளை இயல்பாக்குவதும், சரியான நேரத்தில் விமானங்களை புறப்படுவதை உறுதி செய்யது மீண்டும் பாதையில் கொண்டு வருவதாகும். இது எளிதான இலக்கு அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

* வெடிகுண்டு மிரட்டல்

இதனிடையே, சவுதி அரேபியா மதினாவில் இருந்து ஐதராபாத்துக்கு இண்டிகோ விமானம் நேற்று புறப்பட்டு வந்தது. அதில் வெடிகுண்டு இருப்பதாக யாரோ ஒருவர் இமெயிலில் தகவல் அனுப்பினார். இதையடுத்து அகமதாபாத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகளை கீழே இறக்கிய பின்னர் விமானத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்துக்குரிய பொருள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி என்பது தெரியவந்தது.