Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா மீதான 50% வரி விதிப்பு எதிரொலி; அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோ வைரல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை வால்மார்ட் அங்காடியில் வாடிக்கையாளர் ஒருவர் வீடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல், வெளிநாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். அமெரிக்காவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் இந்த வரிகள் அவசியம் என அவர் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இதனால், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டுப் பொருட்களைக் கொண்டுவரும் நிறுவனங்கள், அரசுக்கு கட்டாய வரி செலுத்த வேண்டியுள்ளது.

இந்த கூடுதல் செலவு, இறுதியில் நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு, பொருட்களின் விலை அதிகரிக்கிறது. சமீபத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இருமடங்காக டிரம்ப் உயர்த்தினார். இந்நிலையில், அமெரிக்காவின் வால்மார்ட் அங்காடியில் டிரம்ப் விதித்த வரிகளால், இந்திய ஆடை மற்றும் பிற பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதை மெர்சிடிஸ் சாண்ட்லர் என்ற பயனர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட வீடியோவில், ஆடைகள் பிரிவில் உள்ள பழைய விலைப்பட்டியல்கள் கிழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு, புதிய அதிக விலை கொண்ட சீட்டுகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காட்டுகிறார். அதில் அவர் கூறுகையில், ‘10.98 டாலராக இருந்த ஆடையின் விலை தற்போது 11.98 டாலராகவும், 6.98 டாலராக இருந்த குழந்தைகள் உடையின் விலை தற்போது 10.98 டாலராகவும், 19.97 டாலராக (இந்திய ரூபாயில் சுமார் ரூ.1,668) இருந்த புத்தகப் பையின் விலை 24.97 டாலராகவும் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.2,086) உயர்த்தப்பட்டுள்ளது’ என்று அவர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் டிரம்ப்பின் வரிக்கொள்கையை கடுமையாக விமர்சித்தும், மற்றவர்கள் இந்த விலை உயர்வை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ.87.58 என்பது குறிப்பிடத்தக்கது.