* 66% இந்திய ஏற்றுமதிக்கு பாதிப்பு
* லட்சக்கணக்கானோர் வேலைக்கு ஆபத்து
* என்ன செய்யப் போகிறது மோடி அரசு
கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் மீண்டும் பொறுப்பேற்றதில் இருந்து அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் சர்ச்சைகளையும், சலசலப்புகளையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க மக்களை தனது அதிரடி முடிவுகளால் திணறடித்த டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்கு என்ற தனது தேர்தல் முழக்கத்தை நடைமுறைபடுத்துகிறேன் என்ற பெயரில் செய்யும் செயல்கள் இன்றைக்கு உலக பொருளாதாரத்தையே ஆட்டம் காண செய்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு எதிராக வரி யுத்தத்தை தொடங்கியுள்ள டிரம்ப், இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக மிரட்டினார்.
இதையடுத்து, அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. அதே நேரம் உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிகமான வரி விதிக்கும் நாடு இந்தியாதான் என்று மீண்டும் மீண்டும் சொல்லி வந்தார் டிரம்ப். பேச்சுவார்த்தை தோல்வியடைய , இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அத்தோடு விட்டாரா டிரம்ப், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரியை அபராதமாக விதிப்பதாக மீண்டும் ஒரு அறிவிப்பை கடந்த 6ம் தேதி வெளியிட்டார். இந்த அபராத வரி நேற்று முதல் அமலாகி உள்ளது.
இந்திய ஏற்றுமதிக்கு 50 சதவீத வரி என்பது நம் நாட்டின் தொழில் துறையின் முதுகெலும்பை உடைக்கும் முயற்சி. ஏனென்றால் இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளி அமெரிக்கா. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதம் ஆகும். அமெரிக்காவுக்கு மட்டும் கடந்த ஆண்டு ரூ.7.58 லட்சம் கோடி மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. 50 சதவீத வரி வதிப்பு, நடப்பு ஆண்டில் இதில் 66 சதவீதம் பொருட்களை பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதானால், ரூ.5.25 லட்சம் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி வதிக்கப்பட உள்ளது.
இவ்வளவு வரி கொடுத்து இந்திய பொருட்களை அமரெிக்க நிறுவனங்கள் வாங்காது என்றும், அதே பொருட்களை மற்ற நாடுகளிடம் இருந்து வாங்கவே அமெரிக்கா முயலும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இந்த வர்த்தக இழப்பு, சீனா, பாகிஸ்தான், நேபாளம், மெக்சிகோ, வியட்நாம், துருக்கி, கவுதமாலா, கென்யா ஆகிய நாடுகளுக்கு லாபம். இது வரை இந்தியாவிடம் இருந்து வாங்கிய பொருட்களை மேற்கண்ட நாடுகளிடம் இனி அமெரிக்கா வாங்கும். அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் அந்த நாட்டுக்கான இந்திய ஏற்றுமதி ரூ.4.35 லட்சம் கோடியாக சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் அடாவடி வரியால் பாதிக்கப்படும் துறைகள் விவரம்:
* கடல் உணவு
இந்தியாவில் இருந்து மீன் மற்றும் இறால் அதிகளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பிலான மீன், இறால் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், இறாலின் பங்கு 40 சதவீதமாகும். இது வரை மீன், இறாலுக்கு அமெரிக்கா எந்த வரியும் விதிக்கவில்லை. தற்போது, மொத்தம் 60 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ளதால் ஏற்றுமதி ரூ.36 ஆயிரம் கோடியாக சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளுக்கு இதுவரை அமெரிக்காவில் 8 முதல் 13.9 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டிருந்தது. இப்போது கூடுதலாக 50 சதவீத வரி என்பது இந்திய ஜவுளி மற்றம் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் இழப்பு தாய்லாந்து வங்கதேசம், இலங்கை கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு லாபமாக மாறிவிடும். கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவுக்கு ரூ.87,550 கோடி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* ரத்தினங்கள் மற்றும் தங்க நகைகள்
இத்துறையில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 87,860 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆனது. இதுவரை 2.1 சதவீத வரி விகிதம் மட்டுமே வசூலிக்கப்பட்டதால் அமெரிக்க சந்தையில் இந்திய நகைகள் மற்றும் ரத்தின கற்களுக்கு தனி மார்க்கெட் உள்ளது. இப்போது கூடுதல் 50 சதவீத வரியால், இந்தியாவில், ரத்தின கற்கள் பாலிஷ், தங்க நகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளன. இதனால், குஜராத்தில் உள்ள பல ரத்தின கற்களுக்கு பாலீஷ் போடு்ம் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 லட்சம் பேர் வேலை இழப்பார்கள்.
* தோல் மற்றும் காலணிகள்
அமெரிக்காவுக்கு கடந்த ஆண்டு இந்தியாவின் தோல், காலணி ஏற்றுமதி ரூ. 7800 கோடியாக இருந்தது. இது அமெரிக்காவின் மொத்த தோல், காலணி சந்தையில் ஒரு சதவீதம்தான். ஆனால், தற்போது வதிக்கப்பட்டுள்ள புதிய வரியால், இந்திய தோல் பொருட்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், இனி தோல் பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது அடியோடு நின்று போகும்.
* எஃகு, அலுமினியம்
இந்தியாவின் எக்கு, அலுமினியம், தாமிர ஏற்றுமதியின் பெரும் பகுதி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது, இதன் ஓராண்டு மதிப்பு மட்டும் ரூ.41 ஆயிரம்கோடி. இது வரை அமெரிக்கா விதித்த 1.7 சதவீத வரி இப்போது 51.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. விளைவு இந்திய ஏற்றுமதிக்கு இனி அமெரிக்காவில் மவுசு இருக்காது.
* இயந்திரங்கள்
அமெரிக்காவுக்கு கடந்தாண்டு ரூ.58,850 கோடிக்கு இயந்திரங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இதுவரை 1.3 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், இனி 51.3 சதவீத வரி என்பதால் இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் உள்ளன. டிரம்பின் 50 சதவீத வரி, ஜவுளி, கடல் உணவு, தோல் தொழிலுக்கு மரண அடி கொடுத்துள்ளது. அத்தோடு, உலகின் 5வது பெரிய பொருளாதாரமான இந்தியாவுக்கு மிகப்பெரிய சவால். இதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பு ஒரு புறம் இருக்க, லட்சக்கணக்கானோரின் வேலை பறிபோகும் நிலை உள்ளது. இதனால், ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை உலகமே உற்று பார்க்கிறது.
* இழந்த மார்க்கெட்டை மீட்பது ரொம்ப கஷ்டம்
டிரம்பின் இந்த அநியாய வரி வதிப்பால் இந்திய நிறுவனங்களுக்கு வர வேண்டிய ஆர்டர்கள் இனி சீனா, வியட்நாம், துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான், வங்கதேசம், கவுதமாலா, கென்யா போன்ற நாடுகளுக்கு சென்றுவிடும். ஒரு வேளை சில மாதங்களுக்கு பிறகு இந்த வரி விதிப்பு திரும்பப்பெறப்பட்டாலும், மீண்டும் ஆர்டர் பெறுவது இந்திய நிறுவனங்களுக்கு குதிரை கொம்பாகிவிடும். இழந்த அமெரிக்க மார்க்கெட்டை மீட்பது ரொம்பவே கஷ்டம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
* பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்
இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 6.5 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் அதன் வளர்ச்சி 5.6 சதவீதமாக குறையும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாற்றுதான் என்ன?
1. அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து வரி ரத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.
2. இந்திய நிறுவனங்கள் நிலைமையை சமாளிக்க ஒன்றிய அரசு நிதி, ஆலோசனை உதவிகளை அளித்தல்.
3. இந்திய பொருட்களை புதிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒன்றிய அரசு உதவ வேண்டும்.
பாதிப்புக்குள்ளான துறைகள்
* மீன், இறால்
* ரசாயனம்
* ஜவுளி, ஆயத்த ஆடை
* ரத்தினங்கள், நகைகள்
* எஃகு, அலுவலகம்
* இயந்திர தயாரிப்பு
தப்பிய துறைகள்
* மருந்து
* ஸ்மார்ட்போன்
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி
* கடந்த ஆண்டு ரூ.7.58 லட்சம் கோடி
* நடப்பு ஆண்டு (கணிப்பு) ரூ.4.35 லட்சம் கோடி
* சரிவு ரூ.3.23 லட்சம் கோடி
* புதிய வரியால் 43% ஏற்றுமதி பாதிப்பு
30% ஏற்றுமதிக்கு எந்த பாதிப்பும் இல்லை
* 30 சதவீத பொருட்களுக்கு 0% வரி
* 4 சதவீத பொருட்களுக்கு 25% வரி
* 66 சதவீத பொருட்களுக்கு 50% வரி