பாலக்காடு: பாலக்காடு அருகே தோட்டப்பயிர்களை சேதப்படுத்திய 50 காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டுக்கொன்றனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒத்தப்பாலம் தாலுகா வாணியம்குளம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட 6,7,9,12,13 ஆகிய வார்டுகளின் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, கிழங்கு வகைகள், ஊடுப்பயிர்கள், சேனை, சேம்பு ஆகியவற்றை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தின. திடீரென சாலையின் குறுக்கே வரும் காட்டுப்பன்றிகளால் டூவீர்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
அட்டகாசம் செய்து வரும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொலை செய்ய வேண்டும் என பஞ்சாயத்து மற்றும் வனத்துறையினரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் ஒத்தப்பாலம் பாரஸ்ட் ரேஞ்சு, வாணியம்குளம் கிராமப்பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மலப்புரம், பாலக்காடு ஆகிய இடங்களிலிருந்து 9 சூட்டிங் லைசன்ஸ் துப்பாக்கி வைத்திருப்பவர்களை வரவழைத்து ஊர்மக்கள் உதவியுடன் சுமார் 18 மணி நேரம் போராடி 50 காட்டுப்பன்றிகளை நேற்று சுட்டுக்கொன்றனர்.