Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை மண்டலங்களில் 50 திருக்கோயில்களுக்கு இந்தாண்டு இறுதிக்குள் குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின், சென்னை மண்டலங்களை சேர்ந்த இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள ஆணையர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அமைச்சர் சேகர்பாபு தலைமை வகித்தார். சென்னை மாநகர் மற்றும் புறநகரில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை 3 மண்டலங்களை சேர்ந்த திருக்கோயில்களில் தற்போது நடைபெற்று வரும் திருப்பணிகள், மரத்தேர், தங்கத்தேர் மற்றும் வெள்ளித்தேர் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு பணிகள், திருக்குளங்களின் சீரமைப்பு பணிகள், கேட்பு வசூல் விவரங்கள், நிலமீட்பு மற்றும் நில அளவை பணிகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் திருக்கோயில்களில் காலி பணியிடங்களை நிரப்பிட மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகிய பொருண்மைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

இதை தொடர்ந்து, ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் மேம்பாட்டிற்கு பல்வேறு வகையில் தேவையான உதவிகளை முதல்வர் செய்து தருவதோடு, முன் எப்போதும் இல்லாத வகையில் இதுவரை ரூ. 1,187.83 கோடியை அரசு நிதியாக வழங்கியுள்ளார். இந்த துறை தொடங்கப்பட்ட நாள் முதல் எந்த ஆட்சி காலத்திலும் இல்லாத வகையில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 3,707 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டு வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலங்களில் மட்டும் 46 பட்டியலை சார்ந்த ஓட்டேரி அருள்மிகு செல்லப்பிள்ளைராயர் திருக்கோயில், வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கொடுங்கையூர், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், கொண்டிதோப்பு, அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில், கொளத்தூர் அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், பெசன்ட்நகர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில், தேனாம்பேட்டை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், போரூர், அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோயில் ஆகிய 8 திருக்கோயில்களுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படவுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் சென்னை மண்டலங்களில் 50 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திடும் வகையில் பணிகளை விரைவுப்படுத்திட வேண்டும். மேலும், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், நில அளவை பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், துறையை கணினிமயமாக்குதல், அலுவலர் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் புதிய திட்டங்களை செயல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் இந்த அரசின் செயல்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையிலும் சென்னை மண்டலங்களை சேர்ந்த செயல் அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் ரதிவர்ஷினிக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை அமைச்சர் சேகர்பாபு வழங்கினார். ஆய்வு கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்பி.என்.தர், தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, சி.கல்யாணி, இணை ஆணையர்கள் இரா. வான்மதி, ரேணுகாதேவி, எஸ்.மோகனசுந்தரம், ஜ.முல்லை, கண்காணிப்பு பொறியாளர்கள் எஸ்.செல்வராஜ், கே.சச்சிதானந்தம், எம்.பழனி, உதவி ஆணையர்கள் க.சிவக்குமார், கி.பாரதிராஜா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.