இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி என்ற டிரம்ப் அறிவிப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி..!
திருப்பூர்: இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி என்ற டிரம்ப் அறிவிப்பால் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூரில் இருந்து ஏற்றுமதி ஆகும் பின்னலாடைகளில் 50 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகுகிறது. திருப்பூரில் இருந்து கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடி மதிப்பிலான பின்னலாடை ஏற்றுமதி செய்யப்பட்டது. பண மதிப்பிழப்பு கொரோனா போன்றவற்றால் பின்னலாடை ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பு அண்மையில் தான் சீராக தொடங்கி இருந்தது.
இந்நிலையில் இவ்வாண்டு தொடக்கத்தில் பின்னலாடை ஏற்றுமதி சற்று அதிகரித்த நிலையில் டிரம்ப் அறிவிப்பால் ஏற்றுமதியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆயத்த ஆடைகளுக்கு 63.9%, நெய்த ஆடைகளுக்கு 60.3 %, உயிரிரசாயன பொருட்களுக்கு 54 %, கம்பளங்கால் தரைவிரிப்புகளுக்கு 52.9%, தங்கம் மற்றும் வைர பொருட்களுக்கு 52.1 %, இயந்திரங்கள் உதிரிபாகங்களுக்கு 51.3% என அமெரிக்கா வரி விதித்துள்ளது.
திருப்பூர் பின்னலாடைகளுக்கு 64 % வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயத்த ஆடை தயாரிப்பில் இந்தியாவிற்கு போட்டியாக உள்ள வங்கதேசம், தைவான், வியட்நாம் பொருட்களுக்கு 20 % மட்டுமே வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரிவிதிப்பால் திருப்பூரில் அடுத்த மூன்று மாதங்களில் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்ள பின்னலாடை வர்த்தகம் பாதிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழலில் அமெரிக்காவுக்கு இந்திய பின்னலாடைகளை எற்றுமதி செய்ய முடியாத அளவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். டிரம்ப்பின் இந்த அதிரடி வரிவிதிப்பால் திருப்பூர் மட்டுமின்றி பல்லடம், கோவை, ஈரோடு, கரூர் ஆடை எற்றுமதியாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஜவுளி தொழிலையே ஸ்தம்பிக்க செய்யும் என்று கூறப்படுகிறது.