குலசேகரப்பட்டணத்தில் இருந்து அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கிலோ செயற்கைகோள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
கன்னியாகுமரி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரி வந்தார். பூம்புகார் படகு துறையிலிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்றார். அங்கிருந்து கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
குலசேகரப்பட்டணத்தில் 2300 ஏக்கர் நிலம் தமிழக அரசின் முயற்சியோடு இஸ்ரோ பெற்றுள்ளது. அங்கு ரூ.1000 கோடி செலவில் நாட்டின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் விரைவில் அமைய உள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் குலசேகரப்பட்டணத்தில் இருந்து 500 கிலோ எடையுள்ள செயற்கை கோளுடன் ராக்கெட் விண்ணில் ஏவப்படும். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் வித்தியாசமாக நன்றாக உள்ளது.அதை தமிழக அரசு சிறப்பாக செய்துள்ளது. அவர்களுக்கு பாராட்டுகள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.