நாகர்கோவில் : ஜம்முதாவியில் இருந்து கன்னியாகுமரி வந்த ரயிலில் 5 கிலோ கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை. வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ரயில்களில் அதிகளவில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறது. இதை தடுக்கும் வகையில் போலீசார் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு கஞ்சாவை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால் இது தொடர்பாக குற்றவாளிகள் யாரும் சிக்குவதில்லை.
அதன்படி வட மாநிலங்களில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி வரும் ரயில்களிலும் கஞ்சா ெதாடர்ச்சியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 10ம்தேதி மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா இருந்த பேக்கை ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைப்பற்றி போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கடந்த மாதம் 33 கிலோ, 10 கிலோ, 6 கிலோ என தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக யாரும் கைது செய்யப்பட வில்லை. கஞ்சா பார்சல்கள் மட்டுமே சிக்குகின்றன. சம்பந்தப்பட்ட நபர்கள் பயணிகளுடன் பயணியாக கலந்து தப்பி விடுகிறார்கள். இவர்கள் நாகர்கோவிலில் தான் தப்பினார்களா? அல்லது பிற பகுதியில் ரயில் நிற்கும் போதே தப்பி இருக்கலாமா? என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த நிலையில் ஜம்முதாவியில் இருந்து நேற்று காலை கன்னியாகுமரி வந்த ஹிம்சாகர் ரயிலில் கஞ்சா இருப்பதாக வந்த தகவலின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை, தமிழ்நாடு ரயில்வே போலீசார், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் இணைந்து கூட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.சம்பந்தப்பட்ட ரயில் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் வந்ததும் பயணிகளிடம் சோதனை நடந்தது.
பயணிகளின் உடமைகளையும் பரிசோதனை செய்தனர். மேலும் ரயில் பெட்டிகளிலும் சோதனை நடந்தது. இதில் ரயிலில் முன் பகுதியில் உள்ள பொதுப்பெட்டியில் அநாதையாக பேக் ஒன்று இருந்தது. அதை சோதனை செய்த போது அதில் 5 கிலோ கஞ்சா பார்சல் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இதை கொண்டு வந்தது யார்? என்பது தெரிய வில்லை. ரயில் நிலையத்தில் போலீசாரை பார்த்ததும் இருக்கையின் அடியில் வைத்து விட்டு குற்றவாளிகள் தப்பி இருக்கலாம் என கூறப்படுகிறது.
ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் 12 மாநிலங்கள் வழியாக 3,797 கி.மீ. தூரத்தை கடந்து கன்னியாகுமரி வருகிறது. பல நிலையங்களில் நின்று செல்லும். எனவே கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பதற்கான தகவல்களும் இல்லை. கைப்பற்றப்பட்ட 5 கிலோ கஞ்சாவை, போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் கொண்டு சென்றனர். குமரி வரும் ரயில்களில் தொடர்ச்சியாக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


