Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

4 ஆண்டுகால திமுக ஆட்சியில் ரூ.7,727.47 கோடி மதிப்பு; கோயில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்

சென்னை: ஆடி மாதம் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 அம்மன் ஆலயங்களில் 20,000 பெண் பக்தர்களுக்கு என ஒட்டுமொத்தமாக ஒரு லட்சம் பக்தர்களுக்கு மங்கலப்பொருட்கள் வழங்கப்படும் என்ற சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், இந்த திட்டத்தை பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். பெண் பக்தர்களுக்கு கூழ் வார்த்து, மங்கலப் பொருட்களை வழங்கினார்.

தொடர்ந்து, அவர் கூறியதாவது:

பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் கோயில் பணிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிதி ஒதுக்கீடு செய்து ரூ.173.58 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. பக்தர்கள் தங்கும் விடுதி, வரிசை மண்டபம், அன்னதான கூடம், சுகாதார வளாகம், ராஜ கோபுரங்கள், உப சன்னதிகள், பிரகாரம் மண்டபம் என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேக விழாவை சிறு அசம்பாவிதம் கூட ஏற்படாமல் திராவிட மாடல் ஆட்சி நடத்தி முடித்துள்ளது. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் வாகன நிறுத்தும் இடத்திற்காக 6 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் திருத்தணி முருகன் கோயிலில் கட்டணம் ரத்து, திருப்பரங்குன்றம் திருவிழாவில் அண்மையில் கட்டணம் ரத்து போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 1119 அம்மன் கோயில்கள், 131 முருகன் கோயில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது.

4 ஆண்டு கால திமுக ஆட்சியில் 7727.47 கோடி ரூபாய் மதிப்பிலான, 7863.08 ஏக்கர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் பிரத்யேக கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு மீட்கப்பட்டு வருகின்றன. 2,04,885.45 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் பணிகளுக்காக 12,876 திருக்கோயில்களுக்கு திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருத்தணி முருகன் கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள், சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு செல்லும் சாலை விரிவாக்க பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திலும் சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் பிரதாப், அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் பழனி, வேலூர் இணை ஆணையர் அனிதா, மாவட்ட திமுக பொறுப்பாளர் வல்லூர் எம்எஸ்கே.ரமேஷ்ராஜ் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, உதவி ஆணையர் சிவஞானம் கோயில் அறங்காவலர் அஞ்சன் லோக மித்ரா, ஒன்றிய செயலாளர் சக்திவேல், கோயில் செயல் அலுவலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.