4வது டி20-ல் 119 ரன்னில் சுருண்டது ஆஸி. பவுலர்கள் மாயாஜாலம் இந்தியா அட்டகாச வெற்றி: வாஷிங்டன் சுந்தர் 3/3
கராரா: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் 1-1 என்று சமனில் உள்ள நிலையில் 4வது டி20 போட்டி கராராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணியில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா-சுப்மன் கில் களமிறங்கினர். இந்த ஜோடி 6.4 ஓவரில் 56 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 28 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்னிலும், கில் 46 ரன்னிலும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
தொடர்ந்து வந்த திலக் வர்மா 5 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 3, வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும் அடுத்தடுத்த வெளியேற, கடைசி நேரத்தில் வந்த அக்சர் பட்டேல் அதிரடி காட்டினார். இதனால், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புகு 167 ரன் எடுத்தது. அக்சர் பட்டேல் 21 ரன் (11 பந்து) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் நாதன் எல்லீஸ், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக கேப்டன் மிட்செல் மார்ஷ், மேதிவ் ஷார்ட் ஆடினர். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில், மேதிவ் ஷார்ட் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஜோஸ் இங்கிலிஸ் 12 ரன்னில் வெளியேற, சிறப்பாக ஆடிய மிட்செல் மார்ஷ் 30 ரன்னிலும் ஆவுட்டானார்.
அடுத்த வந்த , டிம் டேவிட் 14 ரன்னிலும், ஜோஸ் பிலிப் 10 ரன்னிலும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 17 ரன்னிலும், மேக்ஸ்வெல் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டமிழக்க 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன் மட்டுமே எடுத்து ஆஸ்திரேலியா படுதோல்வி அடைந்தது.இந்திய அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3, ஷிவம் துபே மற்றும் அக்சர் பட்டேல் தலா 2, அர்ஷதீப் சிங், பும்ரா, வருண் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலன் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி டி20 போட்டி வரும் 8ம் தேதி நடக்கிறது.
