Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பீகாரில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்; 24 மணி நேரத்தில் 4 பேர் சுட்டுக்கொலை: தேர்தல் நேரத்தில் கேள்விக்குறியாகும் சட்டம்-ஒழுங்கு

பாட்னா: பீகாரில் துப்பாக்கி கலாசாரம் தலைதூக்கிய நிலையில் நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறப்படுகிறது. பீகாரில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாகச் சீர்குலைந்து வருவதை எடுத்துக்காட்டும் வகையில், நேற்று மாலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நான்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சீதாமர்ஹி மாவட்டத்தின் மிகவும் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியான மெஹ்சால் சவுக்கில், புட்டு கான் என்ற தொழிலதிபர் பட்டப்பகலில் நெற்றியில் சுட்டுக் கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சிகளில் பதிவான இந்த கொடூரத் தாக்குதலுக்கு, நிலத்தகராறே காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி, உடலை வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், பாட்னா மாவட்டத்தின் ஷேக்புரா கிராமத்தில், தனது வயலுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டிருந்த கால்நடை மருத்துவர் சுரேந்திர குமார் (50), பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பாஜகவின் விவசாயப் பிரிவின் முன்னாள் தொகுதித் தலைவர் என்பதால், அரசியல் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல், பாட்னாவின் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் விக்ரம் ஜா என்ற மளிகைக் கடைக்காரர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்னதாக சுல்தான்பூர் காவல் நிலையப் பகுதியில் வழக்கறிஞர் ஜிதேந்திர குமார் மஹ்தோ (58) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தினமும் தேநீர் அருந்தும் இடத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது, இந்த கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல தரப்பினரையும் குறிவைத்து அடுத்தடுத்து நடந்த இந்த அடுக்கடுக்கான படுகொலைகள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பெரும் அச்சத்தையும், கடுமையான கேள்விகளையும் எழுப்பியுள்ளன. எதிர்கட்சிகளும் ஆளும் பாஜக கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. தொடர் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவி வரும் நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.