விருதுநகர் அருகே வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை; விருதுநகர் அருகே விஜயகரிசல்குளத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாத்தூர் அருகே, சட்டவிரோதமாக வீட்டில் தயாரித்த பட்டாசு வெடித்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, விஜயகரிசல்குளத்தில் உள்ள கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்னுப்பாண்டியன்.
இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை கீழக்கோதைநாச்சியாபுரத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தை சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) உள்ளிட்ட 5 பேர் இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக பட்டாசு வெடித்து சிதறின. இந்த விபத்தில் ஜெகதீஸ்வரன், முத்துலட்சுமி, சண்முகத்தாய் ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். ஒருவர் படுகாயம் அடைந்தார். பெண் ஒருவர் காயமடைந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விருதுநகர் அருகே விஜயகரிசல்குளத்தில் வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தனியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மேற்படி கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, சண்முகத்தாய் மற்றும் கீழ கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாள் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்