Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
South Rising
search-icon-img
Advertisement

ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 44 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. 2000 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட 8 கட்டடங்கள் உள்ள வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து ஹாங்காங் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஹாங்காங்கின் நியூ டெரிட்டரீஸில் உள்ள டாய் போ பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேரை காணவில்லை என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, கடந்த 30 ஆண்டுகளில் ஹாங்காங் நகரம் கண்ட மிக மோசமான தீ விபத்தாக கருதப்படுகிறது

32 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடத்தின் புதுப்பித்தல் பணிக்காக அதன் வெளிப்புறத்தில் மூங்கில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த சாரத்தில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக அசுர வேகத்தில் அங்கிருந்து ஏழு கட்டிடங்களுக்கு பரவியுள்ளது

இந்தச் சம்பவம் ஹாங்காங் நகரத்தின் மிக உயர்ந்த அவசரகால அளவான 'லெவல் 5' அபாய எச்சரிக்கையாக அறிவிக்கப்பட்டது. 140-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 60 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மீட்புப் பணியின்போது ஒரு தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். விபத்து நடந்த பகுதியை சுற்றி வசித்துவந்த சுமார் 900 குடியிருப்புவாசிகள் பாதுகாப்பாக வேறு தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்த 45 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கவனக்குறைவால் உயிரிழப்பை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை ஹாங்காங் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய ஹாங்காங் தலைமை நிர்வாகி ஜான் லீ உத்தரவின் பேரில் ஒரு தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.