நாகர்கோவில்: கரூரில் நடந்த 41 பேர் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது என்று அன்புமணி கூறினார். பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடத்தி வரும் பிரசார பயண பொதுக்கூட்ட நிகழ்வு, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் குமரி மாவட்டம் வந்த அன்புமணி ராமதாஸ், பின்னர் சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி தலைமைப்பதிக்கு சென்று தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
அய்யா வைகுண்டர் சமூக நீதிக்காக போராடியவர். சாதி பிரிவினைவாதத்தை எதிர்த்தவர். அவரது மண்ணில் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது.
கரூரில் நடந்த 41 பேர் மரணத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. இந்த குழு ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஐ.ஜி. அஸ்ரா கார்க், நேர்மையான அதிகாரி. இந்த விவகாரத்தில் எஸ்.ஐ.டி. விசாரணை குழு அறிவிப்புக்கு முன், சிபிஐ விசாரணை கோரினோம். இப்போது எஸ்.ஐ.டி. குழு விசாரணையில் நம்பிக்கை உள்ளது. கரூர் சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் இரு தரப்பிலும் தவறுகள் நடந்துள்ளன. பொதுவாக பொதுமக்களுக்கும் பொறுப்புகள் வேண்டும் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக நேற்று காலை அன்புமணி, நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று சுவாமி மற்றும் காந்திமதி அம்மனை தரிசனம் செய்தார். அப்போது கோயில் அர்ச்சகர்கள் அவரை பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அன்புமணி கோயிலின் உள் பிரகாரங்களில் வழிபாடு செய்து, சுவாமிக்கு விசேஷ அர்ச்சனை செய்தார்.