விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலி அனைத்து துறை அதிகாரிகளிடம் எஸ்ஐடி 4 மணி நேரம் விசாரணை: கரூரில் 2ம் நாளாக நடந்தது
கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினரின் (எஸ்ஐடி) ஆய்வு கரூரில் 2வது நாளாக நடந்தது. நேற்று நடந்த ஆய்வில் அனைத்து துறை அதிகாரிகளிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூர் ேவலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி பிரசாரத்தின்போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழுவினர் கரூரில் கடந்த 2 நாள் முகாமிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன், கரூர் மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொது செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் இருவரும் கைதுக்கு பயந்து தலைமறைவானர்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி விமலா, சிவில் சப்ளை சிஐடி எஸ்பி ஷியாமளா ஆகியோர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவினர் நேற்றுமுன்தினம் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் சுமார் 45 நிமிடம் நேரில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் இந்த சிறப்பு விசாரணை குழுவினர், நேற்று 2வது நாளாக 3 பிரிவுகளாக பிரிந்து விசாரணையில் இறங்கினர். இதில் ஒரு பிரிவினர் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல்களை நேரில் ஆய்வு செய்தனர். இதேபோல் ஒரு பிரிவினர் நெடுஞ்சாலைத்துறை, மின்சார வாரியம், வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கை குறித்து ஆய்வு பணியில் ஈடுட்டனர். மற்றொரு பிரிவினர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து துறை வாரியாக தனித்தனியாக விசாரணை நடத்தினர். கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 2மணி வரை நடந்தது. பின்னர் இந்த குழுவினர், மாலை 3 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.