கரூர்: கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக விஜய்யின் கரூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. எதனால் வருகை ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரம் நடந்தது. இதில் விஜய்ைய நேரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது அருகில் முண்டியடித்து சென்ற போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்தவுடன் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனடியாக சொகுசு காரில் அங்கிருந்து சென்றுவிட்டனர். விஜய் தனி விமானத்தில் ஏறி சென்னை திரும்பினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் முகாமிட்டு காயமடைந்தவர்களுக்கான சிகிச்சையை தீவிரப்படுத்தியதால் பலர் காப்பாற்றப்பட்டு அவர்களது வீடுகளுக்கு திரும்பினர். கரூர் சம்பவத்துக்கு பின்னர் தவெகவினர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை எட்டி கூட பார்க்கவில்லை. இதனால் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள் தவெகவினர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தனர். இந்தநிலையில் நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20லட்சம் வழங்கப்படும் என அறிவித்த விஜய், சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு பிறகு 17ம்தேதி (இன்று) கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், இறந்த 41 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் முடிவு செய்தார்.
இதற்கான அனுமதி கேட்டு தவெக சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விஜய் நிகழ்ச்சிக்காக தவெகவினர் கரூரில் உள்ள திருமண மண்டபங்களை தேடி அலைந்தனர். இதில் சில உரிமையாளர்கள் மண்டபத்தை ஒதுக்க தயங்கினர். இருந்தாலும் உள்ளூர் தவெகவினர் போராடி 2 மண்டபங்களை புக்கிங் செய்து வைத்திருந்தனர். இந்நிலையில் விஜய்யின் கரூர் வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி தவெக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘தற்போது தீபாவளி நேரம்.
விஜய்யை பார்க்க ரசிகர்கள் திரண்டு விட்டால், அது வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சம்பவம் நடந்து 20 நாட்களுக்கு மேலாகியும் விஜய் கரூர் வராததால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் மேலும் அதிருப்தி ஏற்படுவதை தவிர்க்கவே விஜய்யின் கரூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து அவர் கரூர் வர வாய்ப்புள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அதே சமயம் பாதிக்கப்பட்டவர்களை சென்னை பனையூருக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் கூறி, அங்கு வைத்து நிவாரணம் வழங்குவதற்கான திட்டமும் தயாராகி வருகிறது’ என்றனர்.
* தீபாவளிக்குப்பின் சிபிஐ வருகை
கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐயிடம் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க சிறப்பு புலனாய்வு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். ஆனால் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 5 நாட்களாகியும் இன்னும் சிபிஐ கரூருக்கு வரவில்லை. சிபிஐ குழுவில் இடம் பெற போகும் அதிகாரிகள் யார் என்ற விவரமும் இதுவரையிலும் தெரியவில்லை. தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகே சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணையை தொடங்குவார்கள் என கூறப்படுகிறது.
* துக்கம் அனுசரிப்பதாக கூறிய தவெகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், நகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோருக்கு கரூர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் ஜாமீன் வழங்கியது. அப்போது கோர்ட் வளாகத்தில் இரவு வரையிலும் காத்திருந்த தவெகவினர் ஒருவருக்ெகாருவர் சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டதோடு வக்கீல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். கரூர் நகரில் சில பகுதிகளில் தவெகவினர் பட்டாசு வெடித்தனர். இந்த கொண்டாட்டங்கள் வேறு எங்கேயும் நடக்கவில்லை. சம்பவம் நடைபெற்ற கரூரிலேயே நடந்திருப்பது தான் வேதனை. கரூர் துயரத்துக்கு துக்கம் அனுசரித்து வருகிறோம் என ஆதவ்அர்ஜுனா கூறி இருந்தார். இதையெல்லாம் மறந்து கரூரில் தவெகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தேடி இன்னும் விஜய் வரவில்லை. அதற்குள் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதியழகன் மற்றும் பவுன்ராஜ், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை ஜாமீனில் வெளியே வந்தனர்.