Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

40 ஆடியோ, 20 அந்தரங்க வீடியோவை வெளியிடாமல் இருக்க எஸ்ஐ குடும்பத்தினரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்: பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது வழக்கு

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றிய எஸ்ஐ மனைவி, கடந்த அக்.24ம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், எனது கணவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இதே பிரிவில் கடந்த பிப்ரவரி மாதம் கயத்தாறில் இருந்து மாற்றுப்பணியாக பெண் காவலர் வந்து சேர்ந்தார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் 2024 ஏப்.7ம் தேதி எனது கணவரை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் பேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பெண் காவலரின் நண்பர் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி எனது கணவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு எனது கணவர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியதுடன் அப்போதைய எஸ்பிக்கு புகார் மனுவும் அனுப்பி இருந்தார். காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதன் பேரில் பிரச்னை தொடராமல் இருக்க அதன் மீதான நடவடிக்கை அப்போது கைவிடப்பட்டது.

இதனிடையே பெண் போலீஸ் மற்றும் அவரது நண்பர் மீண்டும் கூட்டுச்சதி செய்து எனது கணவர் பேசிய வாட்ஸ் அப் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை எல்லாம் பதிவு செய்துள்ளனர். வெறும் 3 மாதங்கள் மட்டுமே நீடித்த உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த ஆக.13ம் தேதி என் கணவரை தொடர்பு கொண்ட பெண் போலீஸ், தன்னிடம் உள்ள ரகசிய வீடியோ, ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க முதலில் ரூ.5 லட்சம் தரக்கேட்டு மிரட்டினார். இல்லை என்றால் அதனை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.

எனது கணவர் பணம் தர மறுக்கவே, செப்.6ம் தேதி பெண் போலீஸ் எனது கணவர் சம்பந்தப்பட்ட ஒரு சில ஆடியோக்களை மட்டும் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் நானும் எனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகினோம். இப்பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு, என் கணவரும், பெண் போலீசும் தற்போது சஸ்பெண்டில் உள்ளனர். இந்நிலையில் பெண் போலீஸ், எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து என்னிடம் அசிங்கமாக பேசி பணம் கேட்டு மிரட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

என் கணவரின் காரை ஒரு கும்பலுடன் சேர்ந்து வந்து வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்தும், செப்.17ம் தேதி சமாதான பேச்சுவார்த்தை பேசலாம் வாருங்கள் என கூறி என்னையும் என் உறவினர்களையும் வரவழைத்து 40க்கும் மேற்பட்ட ஆடியோக்கள், 20க்கும் மேற்பட்ட வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், உன் கணவரின் ரகசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் ஒவ்வொன்றாக வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தர வேண்டுமென மிரட்டுகிறார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பெண் போலீஸ் மற்றும் அவரது நண்பர்கள் கூட்டுச்சதியுடன் திட்டமிட்டு நடைபெற்றுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் பெண் போலீஸ் உள்பட 5 பேர் மீது போலீசார் 7 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.