பல்லடம் : பல்லடத்தில் இளம்பெண்ணிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது பணிக்கம்பட்டி. இங்குள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி நதியா (33). இவர் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தின் பல்லடம் பகுதிக்கு பணம் வசூலிப்பாளராக உள்ளார்.
கடந்த 17ம் தேதி இவர் பல்லடம் பணப்பாளையம் - பெத்தாம்பாளையம் ரோடு இட்டேரி வீதியில் ஸ்கூட்டரில் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், நதியாவிடம் முகவரி கேட்பது போல் நடித்து, நதியாவை ஸ்கூட்டருடன் கீழே தள்ளி, அவரிடம் இருந்து ரூ.9 லட்சத்தை வழிப்பறி செய்து தப்பி சென்றனர்.
இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் நேற்று பல்லடம் செட்டிபாளையம் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அவர்கள் சேலத்தை சேர்ந்த பிரகாஷ் (35), பிரவீன் குமார் (34) என்பதும், இதில், பிரகாஷ் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது நதியா பணம் வசூல் செய்வதை நோட்டமிட்டு வழிப்பறி செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது.
இவர்கள் கூறிய தகவலின் பேரில் தேனியை சேர்ந்த லெனின்குமார் (24), பாலாஜி (22) ஆகியோர் நதியாவிடம் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இதையடுத்து போலீசார் இவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 99 ஆயிரம், 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


