*சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சிவகங்கை : அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்ததாக கூறி பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு தாய், மகன், மகள் உட்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை அருகே கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பாலமுருகன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு தாமதித்ததால் பாலமுருகனின் உறவினர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் பயிற்சி மருத்துவர்களை தாக்கியதாகவும், குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும், பயிற்சி மருத்துவர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பயிற்சி மருத்துவர்களை, தாக்கியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.
போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறியும், உரிய சிகிச்சை அளிக்காமல் தாமதித்த பயிற்சி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு பாலமுருகன் மற்றும் அவரது தங்கை, தாய் மற்றும் உறவினர் என 4 பேர் கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.