வெற்றிக்கு அருகில் இருக்கும் போது 3வது நடுவர் உத்தரவின் பேரில் போர் நிறுத்தம் அறிவிக்க கூடாது: பிரதமர் மோடி கிரிக்கெட்டிலிருந்து பாடம் கற்க காங். அறிவுறுத்தல்
புதுடெல்லி: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை பாராட்டிய பிரதமர் மோடிக்கு, அதே பாணியில் காங்கிரஸ் பதிலளித்துள்ளது. துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றிக்காக இந்திய அணி வீரர்களை பாராட்டிய பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டு டிவிட் செய்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘விளையாட்டு மைதானத்தில் ஆபரேஷன் சிந்தூர். முடிவு ஒன்றுதான். இந்தியா வெற்றி பெற்றது. நமது கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
இந்த பதிவை டேக் செய்த காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பர பிரிவு தலைவர் பவன் கேரா, ‘‘பிரதமர் மோடி அவர்களே, முதலில் கிரிக்கெட் போட்டியை போர்க்களத்துடன் ஒப்பிடுவது சரியல்ல. இரண்டாவது, அப்படி நீங்கள் ஒப்பிட்டால், வெற்றியை நெருங்கும் போது நல்ல கேப்டன்கள் எந்த மூன்றாவது நடுவரின் உத்தரவின் பேரில் போர் நிறுத்தத்தை அறிவிக்கக் கூடாது என்பதை இந்திய அணியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றார். இதனால் பாஜ தலைவர்கள் பலரும் காங்கிரசை கடுமையாக விமர்சித்தனர். பாகிஸ்தான் மீது இருக்கும் பாசத்தால் காங்கிரஸ் தலைவர்கள் ஒருவர் கூட ஆசிய கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பாராட்டு தெரிவிக்கவில்லை என சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டனர்.