பிரிஸ்பேன்: இளம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா 167 ரன் வித்தியாசத்தில் அமர்க்கள வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் இந்தியா கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய இளம் அணியின் துவக்க வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 16, கேப்டன் ஆயுஷ் மாத்ரே 4 ரன்னில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பின்னர் ஆடிய விஹான் மல்கோத்ரா 40, வேதாந்த் திரிவேதி, 86, ராகுல் குமார் 62 ரன் குவித்ததால், 50 ஓவர் முடிவில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 280 ரன் விளாசியது. ஆஸி தரப்பில் வில் பைரோம், கேஸி பார்டன் தலா 3 விக்கெட் சாய்த்தனர். பின்னர், 281 ரன் வெற்றி இலக்குடன் ஆஸி களமிறங்கியது. இளம் இந்திய அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளில் அனல் தெறித்ததால் ஆட முடியாமல் ஆஸி வீரர்கள் திணறினர். 28.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட ஆஸி அணி, 113 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இந்தியா 167 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் கிலன் படேல் 4, உத்தவ் மோகன் 3, கனிஷ்க் சவுகான் 2 விக்கெட்டுகளை சாய்தனர். இதன் மூலம் இத்தொடரின் 3 போட்டிகளிலும் இந்திய அணி வென்று ஆஸியை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.