செஸ்டர்-லே-ஸ்ட்ரீட்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் இந்தியாவும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வென்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு, 3வது ஒரு நாள் போட்டி செஸ்டர் லே ஸ்ட்ரீட் நகரில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி வீராங்கனைகள் பிரதிகா ராவல் (26), ஸ்மிருதி மந்தனா (45), ஹர்லீன் தியோல் (45) ரன் குவித்து நல்ல துவக்கம் தந்தனர். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 84 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 102 ரன் குவித்தார். ரிச்சா கோஷ் 50 ரன் எடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது. பின், 319 ரன் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. 3 ஓவருக்குள் 2 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்து தவித்த நிலையில், கேப்டன் நாட் சிவர் பிரன்ட் - எல் லாம்ப் இணை அற்புதமாக ஆடி 162 ரன் குவித்து இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
இருப்பினும், அதற்கு பின் இந்திய வீராங்கனைகளில் துல்லிய பந்து வீச்சால் இங்கிலாந்து நிலை குலைந்தது. 49.5 ஓவரில், இங்கிலாந்து 305 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. அதனால், இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தியா தரப்பில் கிரந்தி கவுட் 52 ரன் தந்து 6 விக்கெட் சாய்த்தார்.