விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ஜெயபாண்டி புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணிடம் நெருக்கமாகி அவரது வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை அவரது கணவர் உள்பட உறவினர்கள் நேரில் கையும், களவுமாக பிடித்ததும் தலைமை காவலர் தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அவரது டூவீலரை உடைத்து சேதப்படுத்தினர். இதேபோல் விருதுநகர் டிஎஸ்பி அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்த போலீசுக்கும், ஒரு பெண் போலீசாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.
இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ் டிரைவர், சம்பந்தப்பட்ட பெண் போலீசிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ், டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று, போலீஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த பிரச்னையை விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் போலீசாரின் அநாகரிக செயல் குறித்து எஸ்பி கண்ணனுக்கு தகவல் தெரிந்தது. விசாரணை அடிப்படையில் எஸ்பி ஏட்டு ஜெயபாண்டி, மற்றொரு பிரச்னையில் சிக்கியுள்ள போலீஸ் டிரைவர், பெண் போலீசை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.


