Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

3 ஓய்வூதிய திட்டம் அறிக்கை அளிக்க கூடுதல் அவகாசம் தேவை இடைக்கால அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு: அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதிய முறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025ல் அரசு அமைத்தது.

பின்னர், உரிய அறிக்கையை செப்டம்பர் 2025க்குள் அரசிற்கு அளிக்க குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது. அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த 8 மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், ஒன்றிய அரசு, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்த வேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது. இச்சூழ்நிலையில், இக்குழுவானது நேற்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.