Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

3 எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு நீக்கம் பாமகவில் முழுஅதிகாரம் கையில் எடுத்த ராமதாஸ்: அன்புமணி ஆதரவு தலைவர்கள் கலக்கம்

திண்டிவனம்: பாமக நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியை விட்டே நீக்கி முழுஅதிகாரத்தையும் கையில் எடுத்துள்ளார் ராமதாஸ். இதனால் அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும் கலக்கத்தில் உள்ளனர். பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருகிறது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்படாத நிலையில் இருவரும் கட்சி நிர்வாகிகளை நீக்கி, புதிய நிர்வாகிகளை நியமித்து வருகின்றனர்.

2026 ஜூன் வரை அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும் என ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், கட்சியின் ஏ-பார்ம், பி-பார்மில் கையெழுத்திடும் அதிகாரம் ராமதாசுக்கு மட்டுமே இருப்பதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

இதனால் பாமக இரண்டாக உடையும் சூழல் நிலவுகிறது. நேற்று முன்தினம் விழுப்புரத்தில் 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து அன்புமணி தரப்பு பாமகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்களும், அன்புமணியின் ஆதரவாளர்களுமான சிவக்குமார் (மயிலம்), வெங்கடேஷ்வரன் (தர்மபுரி), சதாசிவம் (மேட்டூர்) ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் ெபாறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டார்.

இதேபோல் வழக்கறிஞர் பாலுவும் நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் வெளியிட்டார். ராமதாசின் இந்த அதிரடி நடவடிக்கையால் விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ஆதரவு 2ம் மட்ட தலைவர்களும், நிர்வாகிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. அடுத்ததாக அவர்களையும் மாவட்டம், நகரம், ஒன்றியம் வாரியாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ராமதாசின் இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் பாமகவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் உறுதியாக இருப்பது தெளிவாகி உள்ளது. மேலும் அன்புமணி நீக்கத்துக்கான எச்சரிக்கை மணியாகவும் பார்க்கப்படுகிறது. கட்சிக்குள் குடும்ப விஷயத்தை புகுத்தாமல், தனியாக கட்சி பிரச்னைகளை முன்னெடுத்து செல்வதன்மூலம் நிறுவனருக்கான ஆதரவும் படிப்படியாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் வரவுள்ள பொதுத்தேர்தலில் பாமகவுடன் கூட்டணி பேசுவதற்கு ராமதாசை பிறகட்சிகளின் தலைவர்கள் சந்திக்கவே அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.