அன்னூர்: அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே குமாரபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் மற்றும் நாகமணி தம்பதியின் மூத்த மகன் திருமூர்த்தி. தனியார் நிறுவன ஊழியரான இவர் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் கடந்த மே மாதம் உத்தரவிட்டது. ஜூன் மாதம் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. இவ்வழக்கை நடத்த உதவி செய்வதாக அறிமுகமான கோவை வடக்கு மாவட்ட பாஜ செயலாளர் சாமிநாதன் (எ) ராஜராஜசாமி(52), கோகுல கண்ணன், ராசுகுட்டி ஆகிய 3 பேர் இழப்பீடு தொகை கிடைக்க நாங்கள் தான் காரணம் என்று கூறி மிரட்டி ரூ.10 லட்சத்தை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தம்பதியை தொடர்பு கொண்டு கட்சி நிதியாக அண்ணாமலைக்கு வழங்க ரூ.10 லட்சம் கேட்டு, பணம் தராவிட்டால் ஆளையே தூக்கிவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தம்பதியின் மற்றொரு மகன் அருணாச்சலம் வெளியிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அன்னூர் காவல் நிலையத்தில் தனது செயலாளர் மூலம் அளித்த புகாரில் பாஜவினர் பணம் கேட்டு மிரட்டியதற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறி இருந்தார். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்கு பதிந்து மோசடியில் ஈடுபட்டசாமிநாதன் (எ) ராஜராஜசாமி, கோகுல கண்ணன் மற்றும் ராசுக்குட்டி ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.