கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்கார விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் பஸ்சிம் பர்தாமன் மாவட்டம் துர்காபூரில் தனியார் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ஜலேஸ்வரை சேர்ந்த இளம்பெண், கல்லூரி விடுதியில் தங்கி இரண்டாமாண்டு பயின்று வந்தார். கடந்த வௌ்ளிக்கிழமை(அக்.10) இரவு அந்த மாணவி தன் ஆண் நண்பர் ஒருவருடன் வௌியே சென்று உணவருந்தி விட்டு விடுதிக்கு திரும்பினார். அப்போது ஆண் நண்பரை விரட்டி வட்டு மாணவியை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஒடிசா மாணவி பலாத்கார வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பற்றிய அடையாளங்கள் இன்னும் வௌியிடப்படவில்லை. மேலும் இரண்டு பேரை தேடி வருகின்றனர். கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ குற்றவாளிகள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் அந்த மாணவி இரவு 12.30 மணிக்கு வௌியே சென்றதாக கூறப்படுகிறது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளும் விடுதி விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இரவு நேரங்களில் வௌியே செல்லவதை தவிர்க்க வேண்டும்” என கூறினார்.