மூணாறு: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், கட்டப்பனையில் உள்ள ஓட்டலில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ஜெயராமன், கூடலூரைச் சேர்ந்த மைக்கேல், சுந்தரபாண்டியன் ஆகிய மூவரும் நேற்று முன்தினம் சென்றனர். அங்கு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக முதலில் மைக்கேல் இறங்கினார். அவரை தொடர்ந்து சுந்தரபாண்டியனும் இறங்கியுள்ளார். மூவரும் நீண்ட நேரமாக திரும்பி வராததை பார்த்த ஓட்டல் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில், தீயணைப்பு நிலையத்திற்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தொட்டியில் இறங்கி மூவரையும் மயங்கிய நிலையில் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.