புதுடெல்லி: டெல்லியில் சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரும், சாமியார் என அறியப்படுபவருமான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (எ) பார்த்தசாரதி, அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக 17க்கும் மேற்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் பேரில், தலைமறைவாக இருந்த சாமியாரை கடந்த வாரம் ஆக்ராவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாசப் பொருட்கள், சிடிகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது, அவர்களை வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய முயன்றது உள்ளிட்ட பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சாமியாருக்கு உடந்தையாகச் செயல்பட்டதாக, அதே நிறுவனத்தில் பணியாற்றும் நிர்வாகிகளான ஸ்வேதா சர்மா, பாவனா கபில், மற்றும் காஜல் ஆகிய மூன்று பெண்களையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையின் போது, ‘ஒழுக்கம் மற்றும் நேரந்தவறாமை’ என்ற பெயரில் பாதிக்கப்பட்ட மாணவிகளை மிரட்டி, சாமியாருக்கு எதிராகப் புகார் அளிக்காமல் தடுத்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும், மாணவிகளை அச்சுறுத்தியதாகவும், சாமியார் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்திகளை அழித்து ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, மூவர் மீதும் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது, மிரட்டல், ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.