சென்னையில் பரபரப்பு; ஹவாலா பணம் கொடுக்கல் வாங்கலில் கடை ஊழியர் கடத்தல்; ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேர் கைது: 2 மணி நேரத்தில் போலீசார் அதிரடி நடவடிக்கை
தண்டையார்பேட்டை: சென்னையில் நேற்று ஹவாலா பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் கடை ஊழியரை கடத்தி சென்ற ஜிஎஸ்டி அதிகாரி உள்பட 3 பேரை 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, ரூ.50 லட்சத்தை இழந்து சிறைக்கு சென்றுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் சுமித் சிங். இவர் சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். அதேபோல், ஹவாலா பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை சுமித் சிங் கடத்தப்பட்டதாக அவரது தந்தை, உறவினரின் மூலமாக சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்தார். மேலும், தனது மகன் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் வரைபடத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதனடிப்படையில் விசாரித்தபோது, அண்ணாநகரில் ஜிஎஸ்டி அதிகாரிகளின் குடியிருப்பு வீட்டில் சுமித் சிங் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போலீசாருக்குத் தெரியவந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமித் சிங்கை போலீசார் மீட்டனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலைபார்க்கும் சுரேந்தர், வங்கி மேலாளர் நவீன்குமார் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் சரத் என தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுபற்றி போலீசார் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தனியார் வங்கியில் சுமித் சிங், கணக்கு தொடங்கியுள்ளார்.
பின்னர் பணத்தை அவரது கணக்கில் செலுத்த வரும்போது மேலாளராக பணியாற்றிய நவீன்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பின் அடிப்படையில், ‘நான் கூறும் வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் செலுத்தினால், 10 நிமிடங்களில் ரூ.52.50 லட்சமாக கிடைக்கும்’ என்று நவீன்குமாரிடம் சுமித் சிங் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதுபற்றி நவீன்குமார், அவரது நண்பர் சரத் ஆகியோர், ஜிஎஸ்டி அலுவலகத்தில் வேலைபார்க்கும் சுரேந்தர் மூலமாக ஷேர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் சலீம் ஆகியோரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் 3 பேரையும் ரூ.50 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டை பெருமாள் தெருவில் உள்ள ஒரு பொம்மை கடைக்கு சுமித் சிங் அழைத்து சென்றுள்ளார். அங்கு ரூ.52.50 லட்சத்தை காட்டியுள்ளனர். இதை பார்த்ததும் நவீன்குமார் உள்பட 3 பேரும் சேர்ந்து, சுமித் சிங் தெரிவித்த வங்கி கணக்குக்கு 3 தவணைகளாக ரூ.50 லட்சத்தை அனுப்பியுள்ளனர்.
எனினும், அப்பணம் குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு செல்லவில்லை என அந்த வங்கி கணக்கின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் பொம்மைக்கடைக்காரர் ரூ.52.50 லட்சம் பணத்துடன் கடைக்குள் சென்றுள்ளார். மேலும், அவர் எனக்கு உறுதி தகவல் கிடைத்த பிறகுதான் இப்பணத்தை உங்களுக்கு தரமுடியும் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இதில் ரூ.50 லட்சத்தை கொடுத்து ஏமாந்த நவீன்குமார், சுரேந்தர், சரத் ஆகிய 3 பேரும் பணம் கொடுக்கல், வாங்கலில் உறுதுணையாக இருந்த சுமித் சிங்கிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இந்த ஆத்திரத்தில் நேற்று சுமித் சிங்கை நவீன்குமார், சரத் மற்றும் சுரேந்தர் ஆகியோர் காரில் அண்ணாநகருக்கு கடத்தி சென்றனர். அங்குள்ள ஜிஎஸ்டி அதிகாரிகளின் குடியிருப்பு வீட்டில் அடைத்து வைத்து, சுமித் சிங்கிடம் பணத்தை திருப்பி கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதுபற்றி வங்கி கணக்கு வைத்திருப்பவர் சரியான பதில் கிடைக்காததால், சுமித் சிங்கின் தந்தைக்கு போன் செய்து, அவரிடம் மகனை கடத்தி வைத்திருப்பதாகவும் அவரை மீட்க ரூ.50 லட்சம் தரவேண்டும் என்று 3 பேரும் போனில் மிரட்டலாக பேசியுள்ளனர். இதுகுறித்து யானைகவுனி காவல் நிலையத்தில் தனது உறவினர் மூலமாக சுமித் சிங்கின் தந்தை புகார் கொடுத்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஹவாலா பணம் கொடுக்கல், வாங்கலில் ஈடுபட்ட சுமித் சிங், பொம்மை கடைக்காரர் உள்பட சிலரிடம் போலீசார் விசாரித்தனர். புகாரின்பேரில் யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மேலாளர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவரையும் போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதில் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு நண்பரின் பணத்தையும் இழந்து, தற்போது சிறைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், ரூ.50 லட்சம் பணத்தை இழந்தது குறித்து ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தால் இந்த 3 பேரும் சிறைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்க மாட்டார்கள் என்று போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.