திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே காஞ்சங்காடு அம்பலத்தரை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (60). விவசாயி. அவரது மனைவி இந்திரா (58). இந்த தம்பதியின் மகன்கள் ராஜேஷ் (32), ராகேஷ் (28) ஆகியோர். மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே கோபிக்கு அதிக கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 பேரும் வீட்டில் மயங்கிக் கிடந்தனர்.
அவர்களுக்கு அருகே ஆசிட் பாட்டிலும் கிடந்தது. இதை பார்தது அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கோபி, மனைவி இந்திரா, மகன் ராஜேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இன்னொரு மகன் ஆபத்தான நிலையில் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.