* செங்கோட்டையனை போனில் தொடர்பு கொண்ட முக்கிய அரசியல் புள்ளி ஒருவரிடம், ‘‘வருகிற 9ம் தேதி (நாளை) தொலைக்காட்சியை பாருங்கள், என்ன நடக்கிறது என்று தெரியும்’’ என்று கூறியதாக தெரிகிறது.
* எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிமுகவில் இருந்தால்தான், அவர்கள் மூலம் கட்சியை தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும் என்று பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கருதுகிறது.
* விரைவில் பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் போர்க்கொடி தூக்குவார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
* இவர்கள் 2 பேரின் குடுமி பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள்.
சென்னை: அதிமுகவில் செங்கோட்டையனை தொடர்ந்து, எடப்பாடிக்கு எதிராக 3 மாஜி அமைச்சர்கள் போர்க்கொடி தூக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என பல அணிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் கடந்த 10 தேர்தல்களில் அதிமுக படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமே அதிமுக பிரிந்து கிடப்பதுதான் என்று அதிமுக மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அதேபோல், அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த பாஜ மேலிடமும், அதிமுகவை ஒன்றிணைக்க விரும்பி காய்களை நகர்த்தியது.
இதற்காக சில மூத்த மாஜி அமைச்சர்களை வைத்து பேச்சு நடத்த முடிவு செய்து, முன்னாள் மணியான அமைச்சர்களுக்கு இந்த அசைன்மென்ட்டை கொடுத்தது. இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், நந்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் சேலத்தில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, அதிமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று எடப்பாடி தெரிவித்தார். இந்த தகவலை பாஜக மேலிடத்துக்கு மாஜி அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன்பின் பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. எடப்பாடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த அதிமுக படுதோல்வியடைந்தது. இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தாமல் எடப்பாடி செயல்பட்டதால் பலர் அதிருப்தியில் இருந்தனர்.
குறிப்பாக, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையனுக்கு தெரியாமல் அவரது மாவட்டத்தில் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனத்தை எடப்பாடி செய்தார். இதனால் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருந்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்காக எடப்பாடிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் புறக்கணிப்பட்டிருந்தன. இதனால் செங்கோட்டையன் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. தொடர்ச்சியாக எடப்பாடி நிகழ்ச்சிகளை செங்கோட்டையன் புறக்கணித்தார். எடப்பாடிக்கு தெரியாமல் டெல்லி சென்று பாஜவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து வந்தார். இதனால் கட்சியில் இருந்து செங்கோட்டையனை முழுமையாக ஒரம் கட்டினர். இந்நிலையில், கடந்த 5ம் தேதி கோபியில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், ‘‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) 10 நாட்களுக்குள் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும்.
10 நாட்களுக்குள் ஒருங்கிணைக்காவிட்டால், நாங்களே முடிவு எடுப்போம்’’ என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் அணியில் உள்ள தலைவர்கள் ஆகியோர் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள், இதன் பின்னணியில் பாஜ இருப்பதாக சந்தேகம் எழுப்பினர். எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் ‘எடப்பாடியின் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என்று தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் மாஜி அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார். அன்பழகன், தங்கமணி ஆகியோர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் திண்டுக்கல்லில் மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகிய 8 பேருடன் எடப்பாடி 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதில், ‘‘செங்கோட்டையன் பேசுவது கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி; பிரிந்து சென்றவர்களை இணைத்தால் மீண்டும் குழப்பம் ஏற்படும். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செங்கோட்டையன் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி வருகிறார். உட்கட்சி பிரச்னையை வெளியில் பேசிய செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று எடப்பாடி தெரிவித்தார். இதற்கு மாஜி அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையனை, அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். மேலும், அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உட்பட 9 நிர்வாகிகளின் கட்சி பதவிகளை பறித்து எடப்பாடி அதிரடியாக உத்தரவிட்டார். இவரது நடவடிக்கைக்கு சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, புகழேந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். அதேநேரத்தில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஈரோடு மாவட்டத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக எடப்பாடிக்கு தனித்தனியே கடிதம் அனுப்பினர்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பேட்டியளித்த செங்கோட்டையன், ‘ஜனநாயகம் இருப்பதாக சொல்லும் கட்சியில் விளக்கம் கேட்காமல் நீக்கியதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுக ஒருங்கிணைக்கும் பணி தொடரும்’ என தெரிவித்தார். இதையடுத்து, செங்கோட்டையன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். செங்கோட்டையனை ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது, செங்கோட்டையனிடம் ஓபிஎஸ் செல்போனில் தனியாக பேசினார். தொடர்ந்து, செங்கோட்டையனை புகழேந்தி சந்தித்து பேசினார். தொடர்ந்து புகழேந்தி கூறுகையில், ‘வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்று கூடி எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்குவோம்’ என தெரிவித்தார். இந்நிலையில் நேற்று இரவு செங்கோட்டையனை போனில் தொடர்பு கொண்ட முக்கிய அரசியல் புள்ளி ஒருவரிடம், ‘‘ 9ம் தேதி (நாளை) தொலைக்காட்சியை பாருங்கள், என்ன நடக்கிறது என்று தெரியும்’’ என்று கூறியதாக தெரிகிறது. இது, அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் செங்கோட்டையனை பின்புலத்தில் இருந்து இயக்குவது ஆர்எஸ்எஸ் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக உள்ளார். அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க முடியவில்லை. தேர்தல் நேரத்தில் சீட் விவகாரத்திலும் அவர் பிடிவாதமாக நடந்து கொள்கிறார். இதனால் அவரை தங்கள் விருப்பப்படி வளைக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்தால்தான், அவர்கள் மூலம் கட்சியை தங்கள் விருப்பப்படி ஆட்டி வைக்க முடியும். இதனால் அவர்களை எப்படியாவது கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டு, தேர்தலில் வெற்றி பெற அவர்கள் கண்டிப்பாக வேண்டும் என்று பாஜவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் கருதுகிறது. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவர் தான் செங்கோட்டையன். அதனால் தான் அவர் தற்போது வாய்ஸ் கொடுத்துள்ளார். செங்கோட்டையன் பேட்டியின் போது 6 முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடியை சந்தித்து பேசினோம் என்றும் கூறியுள்ளார். அதில் நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், அன்பழகன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் இருந்தனர். இதில் நத்தம் விஸ்வநாதனுக்கு லோக்கலில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது.
மற்றபடி பெரிய அளவில் செல்வாக்கு எதுவும் இல்லை. சி.வி.சண்முகத்துக்கு விழுப்புரத்தை தாண்டினால் செல்வாக்கு இல்லை. அதே போல அன்பழகனுக்கு தர்மபுரியில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது. மீதியிருப்பது தங்கமணி, எஸ்.பி.வேலுமணி தான். இவர்கள் தான் விரைவில் பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்குவார்கள் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் இவர்கள் இரண்டு பேரின் குடுமி பாஜவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்கள் சொல்லும் வார்த்தைக்கு கட்டுப்பட்டு செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் தான் மீண்டும் பாஜவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர். அதனால் தான் எடப்பாடி வேறு வழியில்லாமல் பாஜவுடன் கூட்டணி அமைக்க சம்மதம் தெரிவித்தார். இவர்கள் 2 பேர் மூலம் மீண்டும் பாஜ, ஆர்எஸ்எஸ் அமைப்பு குரல் எழுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் விரைவில் அவர்கள் பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் என்ற பிரச்னையை ஓரிரு நாளில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதை மனதில் வைத்து தான் 9ம் தேதி நடப்பதை பாருங்கள் என்று செங்கோட்டையன் அதிரடியாக சவால் விடுத்துள்ளதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, நேற்று தொடர்ந்து கட்சியினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சி.வி.சண்முகம் விழுப்புரத்துக்கு வந்திருந்தார். அப்போது ஜிஆர்பி தெரு பகுதியில் கட்சி பிரமுகர் இல்லத்துக்கு சென்றபோது செய்தியாளர்கள் அவரை பின்தொடர்ந்து சென்று, அதிமுகவில் செங்கோட்டையனை நீக்கியது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். அதற்கு சி.வி.சண்முகம், ‘2 நாட்கள் பொறுத்திருங்கள்.. தொலைக்காட்சியில் நான் எதுவும் பார்க்கவில்லை. பார்த்துவிட்டு பின்னர் பதில் கூறுகிறேன்’ என்று கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். அதேபோல் மற்றொரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் செங்கோட்டையன் குறித்து கேட்டபோது வாய் திறக்காமல் காரில் ஏறியவுடன், வாழ்த்துகள்... என்று மட்டும் கூறிவிட்டு சென்றார். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி மோதல், கட்சி ரீதியான பிரச்னைக்கு முன்னின்று முதலாவதாக பேட்டியளிக்கும் சி.வி.சண்முகம் தற்போது வாய் திறக்காமல் செய்தியாளர்களை கண்டதும் ஓட்டம் பிடித்து வருகிறார்.
இதுகுறித்து அக்கட்சி வட்டாரத்தில் கூறுகையில், ‘செங்கோட்டையன் கூறிய 6 நபர்களில் சி.வி.சண்முகம் ஒன்று. இபிஎஸ்சுக்கு ஆதரவாக இருந்திருந்தால் அவர் எடுத்த முடிவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்திருப்பார். ஆனால் இதுகுறித்து எதுவும் பேசாமல் சென்றுள்ளார். மாநிலங்களவை உறுப்பினரான சி.வி.சண்முகம் சமீப காலமாக டெல்லியிலேயே முகாமிட்டிருந்ததாக கூறப்பட்டது. தற்போது செங்கோட்ைடயனை ஆர்எஸ்எஸ் அமைப்பு இயக்குவதாக கூறப்பட்ட நிலையில் அந்த வட்டத்தில் சி.வி.சண்முகமும் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் எந்த கருத்துக்களையும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருவதாகவும் கடைசியில் இபிஎஸ்சுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் பிரச்னைக்கும் பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது மீண்டும் பூகம்பம் வெடிக்கும் என்று கூறப்படுகிறது என்றனர்.
இபிஎஸ்சை தனிமைப்படுத்தி மீண்டும் ஒருங்கிணைப்பு குழு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவில் பொதுச்செயலாளராக உள்ள இபிஎஸ்சை தனிமைப்படுத்தி மீண்டும் ஒருங்கிணைப்பு குழு அமைக்க உள்ளதாகவும், இதற்கான வேலைபாடுகளை பாஜ செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்காவிட்டாலும் தங்கள் தொகுதியை மீண்டும் தக்க வைக்க மூத்த நிர்வாகிகள் அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக இபிஎஸ்சை தனிமைப்படுத்தி மீண்டும் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்த உள்ளதாகவும், இதற்கான வேலைகளை பாஜ முன்னின்று செயல்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. காரணம் முதல்வர் வேட்பாளரில் இபிஎஸ்சுக்கும், பாஜவுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டதால் அக்கட்சியில் ஒற்றை தலைமையை அகற்றி ஒருங்கிணைப்பு குழுவை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.