*விவசாயிகள் கவலை
ஓசூர் : தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு 30க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் திரும்பி வந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கர்நாடகா வனப்பகுதியிலிருந்து, கடந்த மாதம் தமிழக வனப்பகுதியான ஜவளகிரி வழியாக, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு 50 யானைகள் வலசை வந்தது. இந்த யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ராயக்கோட்டை வனச்சரத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் வழியாக, ஓசூர் வனச்சரகம் சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்தன.
பின்னர், தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனத்தையொட்டியுள்ள பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதையடுத்து, வனத்துறையினர் இந்த யானைகளை ஒன்றிணைத்து, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இடம் பெயர செய்தனர். ஆனால், அந்த யானைகள் மீண்டும் ஊடேதுர்க்கம் மற்றும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பி வந்தன.
இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, யானைகளை ஒன்றிணைத்து மீண்டும் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். பின்னர், அந்த யானைகளை தெர்மல் டிரோன் மூலம் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு, 30க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து, ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பி வந்தன.
இந்த யானைகள் மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பி வராமல் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். யானைகளை விரட்டினாலும் திரும்ப, திரும்ப ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்கு திரும்பி வந்து பயிர்களை சேதப்படுத்துவதால், அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


