Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பேச்சுவார்த்தை நடத்திய குஜராத் போலீஸ்; 2 பானி பூரிக்காக மறியல் போராட்டம்: நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த பெண்

வடோதரா: வடோதராவில் பானி பூரி குறைவாகக் கொடுத்ததால் பெண் ஒருவர் நடுரோட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வடோதராவில், சாலையோர பானி பூரி கடையில் 20 ரூபாய்க்கு ஆறு பானி பூரிகள் கொடுப்பதற்கு பதிலாக நான்கு மட்டுமே வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அந்த வியாபாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதத்தைத் தொடர்ந்து அந்தப் பெண், நகரின் சூரர் பகுதிக்கு அருகே உள்ள பரபரப்பான சாலையின் நடுவில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

தனக்கு நீதி வேண்டும் என்றும், விடுபட்ட இரண்டு பானி பூரிகளை உடனடியாக வழங்க வேண்டும் அல்லது அந்த வியாபாரி தனது கடையை மூடிவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் கண்ணீருடன் முழக்கமிட்டார். அந்த வியாபாரி சமீபகாலமாக பானி பூரிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பெண்ணிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று அப்பெண் போராட்டத்தைக் கைவிட்ட போதிலும், அவருக்குக் கூடுதலாக இரண்டு பானி பூரிகள் கிடைத்ததா என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இதனிடையே, அப்பெண்ணின் இந்த பரபரப்பான போராட்டத்தை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காணொளி இணையத்தில் அதிவேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் பலரும், ‘இரண்டு பானி பூரிக்கான சத்தியாகிரக போராட்டம்’ என்று வேடிக்கையாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.