கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 3ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகின்றது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாடுகளுக்கு இடையே போரை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிளும் தோல்வியில் முடிந்தன. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இருநாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ வீரர்கள் உக்ரைனின் இரண்டு முக்கிய கிழக்கு நகரங்களில் உக்ரைனின் படைகளை சுற்றி வளைத்துள்ளதாக அதிபர் புதின் நேற்று முன்தினம் தெரிவித்தார். மேலும் சரணடைதலுக்கான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கிழக்கு டொனேஸ்ட்க் பிராந்தியத்தில் உள்ள உக்ரைன் கோட்டையான போக்ரோவ்ஸ்க்கிலும், வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் குபியன்ஸ்கிலும் உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். போக்ரோவ்ஸ்க்கைப் பாதுகாப்பதற்கான உக்ரைனின் 7வது விரைவு எதிர்வினை படை, நகரத்தை சுற்றி வளைக்கும் முயற்சியில் சுமார்11ஆயிரம் ரஷ்யவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே உக்ரைன் இதனை மறுத்துள்ளது. குபியன்ஸ்க் நகரம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது கட்டுக்கதை மற்றும் கற்பனையாகும் என்று உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
* எரிசக்தி உள்கட்டமைப்பு மீது தாக்குதல்
உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. ரஷ்யாவின் தொடர்ச்சியான டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக நாட்டின் அனைத்து பிராந்தியங்களிலும் மின்தடைகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது எரிசக்தி தீவிரவாதம் என்று உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
 
  
  
  
   
