சென்னை: சென்னை வடபழனியை சேர்ந்த சுரேஷ்குமார் பாட்டி என்பவர் 17.01.2025 அன்றும், செந்தில் என்பவர் 05.12.2024 அன்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரில், கடந்த 2023ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஏகன் மற்றும் தீபக் ஜெயின், ஆகியோர் தங்கள் பெயரில் மெடிக்கல் ஸ்கேன் சென்டர் ஆரம்பித்து நடத்துவதாக கூறி ஏமாற்றி அதற்கு தேவையான உபகரணங்கள் வாங்க வேண்டும் எனக் கூறி நம்ப வைத்து போலியான Partnership Deed -ஐ தங்கள் பெயருடன் நிதி நிறுவனங்களில் தாக்கல் செய்து சுமார் 7 கோடி ரூபாய் வரை கடன் பெற்றதாகவும், அதற்கு சென்னை துங்கல்மால் ஜெயின் மற்றும் சென்னை ஸ்டாலின் ஆகியோர் உடந்தையாக இருந்து மருத்துவ உபகரணங்கள் வாங்காமல் கடன் தொகையையும் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, போலி ஆவண புலனாய்வு பிரிவில் (Forgery Investigation Wing) 01.04.2025 மற்றும் 22.08.2025 ஆகிய தேதிகளில் 2 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்குகளில் உரிய துரித நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா, இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், மத்திய குற்றப்பிரிவு - II காவல் துணை ஆணையாளர் மேற்பார்வையில், போலி ஆவண புலனாய்வு பிரிவு காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரிகளை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், முக்கிய எதிரிகள் 1.ஏகன், வ/39, கொளத்தூர், 2.தீபக் ஜெயின், வ/42, பார்க் டவுன் ஆகிய இருவரை 09.09.2025 ஆம் தேதி முறையே கொளத்தூர், பூம்புகார் நகர் பேருந்து நிலையம் மற்றும் வால்டாக்ஸ் சாலை பகுதியில் கைது செய்து, அவர்களிடமிருந்து 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர் எதிரிகள் இருவரும் எழும்பூர், CCB& CBCID வழக்குகள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி 09.09.2025 அன்று சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இவ்வழக்குகளில் தலைமறைவாக இருந்து வரும் மற்ற எதிரிகளை கைது செய்ய தனிப்படை போலீஸ் தேடி வருகின்றனர்.