Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம்; குடிநீரில் கழிவுநீர் கலப்பா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னை: பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பா? என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, பேதி பாதிப்பு ஏற்பட்டது. 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

உடனடியாக மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். தாம்பரம் மாநகராட்சியின் 13-வது வார்டு பகுதியில் வரும் இந்த இடத்தில், பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை விவரங்கள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறியதாவது; குடிநீர் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். பாதிக்கப்பட்ட இடத்தில் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்படுகிறது. 2 பேர் உயிரிழப்புக்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிவரும். பல்லாவரத்தில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். குடிநீர் மாதிரி சோதனை தொடர்பான முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும்.

ஆய்வு முடிவுகள் பெறப்பட்ட பின்னரே உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும். ஆய்வு மாதிரிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதியில் மாநகராட்சி மூலம் வாகனங்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை பரப்புகிறார். எதற்கெடுத்தாலும் பதற்றத்தை ஏற்படுத்துகிறார். பதற்றமான செய்திகளை பதிவிடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்று கூறினார்.