கஞ்சா கடத்திய பாஜ சிறுபான்மையின நல அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேர் கைது: கஞ்சா, கார் செல்போன் பறிமுதல்
சென்னை: காரில் கஞ்சா கடத்திய வழக்கில் பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து கார், செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு கார், போலீசாரை கண்டதும் வேகமாக சென்றுள்ளது. இதனால் போலீசார் விரட்டி சென்று அந்த காரை சுற்றிவளைத்து காரில் இருந்த 2 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றபோது பிடித்து இருவரை திருமங்கலம் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், செங்குன்றம் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் (22), நண்பர் ரஷீத் (23) என்பதும் தெரியவந்தது. இதில், ரகீமின் தந்தை வேலூர் இப்ராகிம் என்பதும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. தெரிந்த நபர்களுக்கு விற்பனை செய்ய கஞ்சா பொட்டலங்கள் எடுத்து சென்றார்களா, கஞ்சா பழக்கம் உடையவர்களா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். இவர்களிடம் இருந்து 15 கிராம் கஞ்சா பொட்டலம், கார், 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தல் வழக்கில் பாஜக பிரமுகரின் மகன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.