Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரூ.35,440 கோடியில் 2 புதிய விவசாய திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: பிரதமர் மோடி ரூ.35,440கோடி மதிப்பீட்டில் இரண்டு மிகப்பெரிய புதிய விவசாய திட்டங்களை தொடங்கி வைத்தார். டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன பூசா வளாகத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாட்டில் மிகப்பெரிய இரண்டு விவசாய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். ரூ.11,440 கோடி மதிப்பில் பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகரிக்கவும், குறைந்த செயல்திறன் கொண்ட 100 மாவட்டங்களில் ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பில் விவசாயத் துறை வளர்ச்சியை மேம்படுத்தும் புதிய முயற்சியாக மொத்தம் ரூ.35,440 கோடி செலவில் இரண்டு பெரிய விவசாயத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

மேலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் ரூ.5,450 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அதோடு சுமார் ரூ.815 கோடி மதிப்பிலான கூடுதல் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதை தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளை சந்தித்து உரையாடினார். பூசா வளாகத்தில் நடந்து வரும் விவசாய ஆராய்ச்சி பணிகளையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, அங்கு 30 நிமிடம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: சுதந்திரத்திற்குப் பிறகு நீங்கள் (விவசாயிகள்) இந்தியாவை உணவு தானியங்களில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியுள்ளீர்கள். இப்போது, ​​இந்தியாவை வளர்ந்த நாடாக (விக்சித் பாரத்) மாற்றுவதில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஒருபுறம், நாம் உணவில் தன்னிறைவு அடைய வேண்டும், மறுபுறம் உலக சந்தைக்கு உற்பத்தி செய்ய வேண்டும். நண்பர்களே, நாம் சர்வதேச சந்தையின் கதவுகளைத் தட்ட வேண்டும். உலகளாவிய தேவை உள்ள பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். அதோடு நாம் நமது இறக்குமதியைக் குறைக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதில் பின்தங்கியிருக்கக்கூடாது.

இந்த இரட்டை நோக்கங்களை அடைவதில் இரண்டு புதிய திட்டங்களும் முக்கிய பங்கு வகிக்கும். புரதப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கோதுமை மற்றும் அரிசியைத் தாண்டி பருப்பு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியா தான் உலகின் மிகப்பெரிய பருப்பு வகைகள் உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் என்றாலும், இன்னும் நாம் இறக்குமதியை சார்ந்துள்ளோம். எனவே பருப்பு வகைத் திட்டத்தின் கீழ், 2030 ஆம் ஆண்டுக்குள் பருப்பு வகைகளின் பரப்பளவை 35 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு அதிகரித்து உற்பத்தியை அதிகரித்து தன்னிறைவு அடைவதே இதன் நோக்கம். இந்த இயக்கம், தற்போதைய 252.38 லட்சம் டன்னிலிருந்து 2030-31 ஆம் ஆண்டுக்குள் பருப்பு வகைகளின் உற்பத்தியை 350 லட்சம் டன்னாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும் குறைந்த செயல்திறன் கொண்ட 100 விவசாய மாவட்டங்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பல்வேறு அமைச்சகங்களிலிருந்து 36 திட்டங்கள் ஒருங்கிணைக்கப்படும். இந்தத் திட்டம் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல், நீர்ப்பாசனம் மற்றும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் கடன் அணுகலை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். முந்தைய காங்கிரஸ் அரசுகள் விவசாயத் துறையை புறக்கணித்து விட்டன. இந்த முக்கியமான துறையின் வளர்ச்சிக்கான தொலைநோக்கு மற்றும் உத்தி அவர்களிடம் இல்லை.

கடந்த 10 ஆண்டுகளில் உரங்களுக்கு ரூ.13 லட்சம் கோடி மானியம் எங்கள் அரசு வழங்கியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், விவசாயிகளின் ஒத்துழைப்பையும் சந்தை அணுகலையும் மேம்படுத்த 10,000க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தியாளர் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

* பிரதமர் மோடியுடன் குவால்காம் சிஇஓ

அமெரிக்காவை சேர்ந்த சிப் தயாரிப்பாளரான குவாம்காம் நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான கிறிஸ்டியானோ ஆர் அமீன் பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் புதுமைகளில் இந்தியாவின் முன்னேற்றங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.