புதுடெல்லி: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க, வெஸ்ட் இண்டீஸ் அணி போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி, டெல்லியில் கடந்த 10ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் அதிரடி சதங்களால் 5 விக்கெட் இழப்புக்கு 518 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அதையடுத்து, 2ம் நாளில் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ், ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில், 3ம் நாளான நேற்று, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அடுத்த 41.5 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட அந்த அணி, 248 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5, ரவீந்திர ஜடேஜா 3, ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதையடுத்து, 270 ரன்கள் பின்தங்கிய நிலையில், பாலோ ஆனாக, 2ம் இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் ஆடியது. துவக்க வீரர்களில் ஒருவரான டகெநரைன் சந்தர்பால் 10, பின் வந்த ஆலிக் அதனேஸ் 7 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி 3வது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்தனர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்திருந்தது. கேம்ப்பெல் 87, ஹோப் 66 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்னும் 97 ரன்கள் பின்தங்கிய நிலையில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடிக் கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ், 4ம் நாளான இன்று, 2ம் இன்னிங்சை தொடர்கிறது.