புதுடெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா, யஷஸ்வி ஜெய்ஸவாலின் அதிரடியால், 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. ஏற்கனவே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இமாலய வெற்றி பெற்று 1-0 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டெல்லியில் நேற்று 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த நிலையில், 38 ரன்னில் ராகுல் அவுட்டானார்.
அதையடுத்து, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் இணை சேர்ந்து பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். அட்டகாச ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 145 பந்துகளில் சதத்தை எட்டினார். அதன் பின்னும் அவர்களின் அதிரடி தொடர்ந்தது. இந்த இணை 193 ரன்கள் குவித்த நிலையில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன், 87 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினார். சிறிது நேரத்தில், 224 பந்துகளில் ஜெய்ஸ்வால் 150 ரன்களை எட்டினார். நேற்றைய ஆட்ட நேர முடிவில், 90 ஓவரில் இந்திய அணி, 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ஸ்வால் 173 (22 பவுண்டரி), கில் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமெல் வாரிகன் 2 விக்கெட் வீழ்த்தினார்.