லக்னோ: ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக ஆடி 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா வந்துள்ள ஆஸி ஏ அணி, இந்தியா ஏ அணியுடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடி வந்தது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது போட்டி, லக்னோ நகரில் கடந்த 23ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் ஆஸி அணி சிறப்பாக ஆடி 420 ரன்களை குவித்தது.
அதற்கு பதிலடியாக முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 194 ரன்னுக்கு ஆல்அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தது. இருப்பினும், ஆஸி அணி 2வது இன்னிங்சை ஆடியபோது, இந்திய வீரர்கள் குர்னூர் பிரார், மானவ் சுதர் தலா 3, முகம்மது சிராஜ், யாஷ் தாக்குர் தலா 2 விக்கெட் வீழ்த்தி அந்த அணியை நிலைகுலையச் செய்தனர். அதனால், ஆஸி ஏ 185 ரன்களில் சுருண்டது. அதையடுத்து, 412 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ 2வது இன்னிங்சை துவக்கியது.
3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா, 2 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று, சாய் சுதர்சன் 44, மானவ் சுதர் 1 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர். சாய் சுதர்சன் அற்புதமாக ஆடி 100 ரன் குவித்தார். கே.எல். ராகுல் 210 பந்துகளில் 176 ரன் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்னில் வீழ்ந்தார். 91.3 ஓவரில் இந்தியா ஏ, 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஆஸி தரப்பில் டாட் மர்பி 3 விக்கெட் எடுத்தார்.