மத்தியப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலி கடிக்கு 2 பச்சிளம் பெண் குழந்தைகள் பலி: பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற போராட்டம்
இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்ததால் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பழங்குடியின குழுவினர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் செயல்பட்டு வரும் மஹாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த மருத்துவமனை அரசின் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இரவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பச்சிளம் குழந்தையின் விரல்களை எலி கடித்துவிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி இரவு மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பட்டைகளில் எலி கடித்திருந்தது. அதன் பின்னர் இரு பெண் குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன.
இந்நிலையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக பணியில் இருந்த அரசு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் பழங்குடியின அமைப்பு காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஜெய் ஆதிவாசி யுவ சக்தி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள். மருத்துவமனையின் தலைவர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஜெய் ஆதிவாசி யுவ சக்தி அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.