ஆலந்தூர்: கிண்டி சிட்கோ பகுதியில் மெத்தபெட்டமைன் போதை பொருள் வைத்திருந்த 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 கிராம் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிண்டி, சிட்கோ எஸ்டேட் வளாகப் பகுதியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக நேற்று கிண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிட்கோ எஸ்டேட் பகுதியில் சந்தேக நிலையில் சுற்றி திரிந்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர்களின் கைப்பையை சோதனை செய்தனர்.
இதில், அவர்கள் மெத்தமெட்டமைன் போதை பொருள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பிரசாத் (30), சூர்யா (23) எனத் தெரியவந்தது. இவர்கள் வெளிமாநிலங்களில் இருந்து மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தி வந்து, கிண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. கிண்டி போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் 4 கிராம் மெத்தபெட்டமைன் போதைபொருள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.